நாகர்கோவில் அருகே 2 வாலிபர்கள் படுகொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் அஜித்குமார் (வயது 21). பாலிடெக்னிக் முடித்து விட்டு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். தற்போது இவர்கள் நாகர்கோவில் அருகே வண்டிகுடியிருப்பு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தனர்.
அஜித்குமாரும், அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் அர்ஜூனும் (16) நண்பர்கள். அர்ஜூன் 10-ம் வகுப்பு படித்துள்ளார். நேற்று (07-07-2019) மதியம் 2.45 மணியளவில் அஜித்குமார் வீட்டில் இருந்தார். அப்போது, அர்ஜூன் அங்கு வந்து அவசரமாக வெளியே செல்லவேண்டும் என்று அழைத்தான். உடனே, அஜித்குமார் தனது மாமா தங்கராஜாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பருடன் வெளியே புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அஜித்குமார் ஓட்டி செல்ல அர்ஜூன் பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் வண்டிகுடியிருப்பில் இருந்து என்.ஜி.ஓ. காலனி நோக்கி கால்வாய் கரை வழியாக புறப்பட்டனர். நாகர்கோவில் அருகே சி.டி.எம்.புரம் பகுதியில் வந்த போது, எதிரே 3 மோட்டார் சைக்கிள்களில் ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் இருவரையும் திடீரென வழிமறித்து நிறுத்தினர்.

உடனே, அஜித்குமாரும், அர்ஜூனும் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த கும்பல் நண்பர்கள் இருவரையும் ஓட, ஓட விரட்டியது. பின்னர் அவர்களை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, மார்பு உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் பொதுமக்களை பார்த்ததும் அங்கிருந்து அவசர, அவசரமாக மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர். சிறிது நேரத்தில் வெட்டு காயமடைந்த நண்பர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தார்த்து சங்கர்ராய், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகன், மேரி அனிதா, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் ஜெபதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். மேலும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோரும் கூடியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், பிணங்களை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் இரட்டை கொலை குறித்து துப்பு துலக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1/Post a Comment/Comments

  1. This is amazing article and i am very enjoy these king of articles. I am blogger and wordpress developer and provide of all responsive wordpress themes for all user if you want to download these king of themes please download from allwordpresstheme.com

    ReplyDelete

Post a Comment

Previous News Next News
New Vision
New Vision