எதிர்ப்பு போராட்டம் தேவையற்றது:
விஸ்வரூபம் படத்துக்கு கேரள மார்க்சிஸ்ட் ஆதரவு
26-01-2013
கமல்ஹாசன் நடித்து இயக்கி உள்ள “விஸ்வரூபம்” படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் முஸ்லிம்கள் உள்ள கேரளத்தில் 86 தியேட்டர்களில் “விஸ்வரூபம்” திரையிடப்பட்டது. அங்கு பெரும்பாலான தியேட்டர்களில் எந்த எதிர்ப்பும் இன்றி படம் வெளியாகியது.
காலை முதலே ரசிகர்கள் திரண்டு வந்து படம் பார்த்த வண்ணம் இருந்தனர். கண்ணூர், பாலக்காடு பகுதியில் மட்டும் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு காரணமாக விஸ்வரூபம் படம் வெளியாகவில்லை. இந்தநிலையில், விஸ்வரூபம் படத்துக்கு எதிரான போராட்டம் தேவையற்றது என கேரள மாநில மார்க்சிஸ்ட் பொதுச்செயாலாளர் பினராய் விஜயன் கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
கமல்ஹாசன் எப்போதுமே மதச்சார்பின்மைக்கும், மனித உணர்வுகளுக்கும் ஆதரவாக இருப்பவர். சமூகத்தின் எந்தப் பிரிவையும் விமர்சிக்கும் வகையில் அவர் செயல்படமாட்டார். இத்திரைப்படத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது உள்நோக்கம் உடையது. எனவே அவரது திரைப்படத்தை எதிர்த்து போராடுபவர்கள் அதனைக் கைவிட்டு, அதனை நீதிமன்ற முடிவுக்கு விட்டுவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment