மதுரை - குமரி இருவழிப்பாதை திட்டத்துக்கு நிதி ஆயோக் ஒப்புதல்

மதுரை - கன்னியாகுமரி ரெயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற மத்திய கொள்கைக் குழு (நிதி ஆயோக்) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென்மாவட்ட ரெயில்களின் பயண நேரம் கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.
தலைநகரான சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள ரெயில் பாதை தமிழகத்தின் மிக முக்கிய ரெயில் வழித்தடமாகும். இந்த வழித்தடம் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 11 மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரியை வந்தடைகிறது. இந்த பாதையை மையமாக வைத்தே மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பாதைகள் பிரிந்து செல்கின்றன.

இந்த வழித்தடம் ஒரு வழிப் பாதையாக இருப்பதால் புதிய ரெயில்கள் இயக்க முடியாதநிலை இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரை - கன்னியாகுமரி இரு வழிப்பாதைத் திட்டம் செயல்படுத்த நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. தென் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே நிர்வாகம் தென் தமிழகப் பகுதிகளான கன்னியாகுமரி - மதுரை (246 கிலோ மீட்டர்) வழித்தடங்களை இருவழிப் பாதைகளாக மாற்றுவதற்கு 2015-16-ம் ஆண்டு ரெயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி 159 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு திட்டம், மணியாச்சி - நெல்லை - நாகர்கோவில் 102 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு திட்டம், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 87 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு திட்டம் என 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:-

இந்தத் திட்டம் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவுத் திட்டமாகும். கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு இரு வழிப்பாதை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டால் தற்போது இந்தத் தடம் வழியாக இயக்கப்பட்டு வரும் அனைத்து ரெயில்களுக்கும் பயண நேரம் கணிசமான அளவு குறையும்.

நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, விழுப்புரம் போன்ற இடங்களிலிருந்து வட இந்திய நகரங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து ரெயில்களும் குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க முடியும். தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு கூடுதல் புதிய ரெயில்கள் அறிவிக்கப்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision