அனந்தபுரி இரயில் இரணியல் நிலையத்தில் நிரந்தரமாக நின்று செல்ல பயணிகள் சங்கம் கோரிக்கை

அனந்தபுரி இரயில் இரணியல் நிலையத்தில் நிரந்தரமாக நின்று செல்ல பயணிகள் சங்கம் கோரிக்கை
31-08-2014
திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி இரயில் இரணியல் இரயில் நிலையத்தில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக மத்திய கனரக மற்றும் பொதுதுறைநிறுவனங்கள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இரயில்வே அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கோரிக்கை மனுவில் தெருவிப்பதாவது

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவில் உள்ள முக்கிய இரயில் நிலையம் இரணியல் இரயில் நிலையம் ஆகும். இந்த இரயில் நிலையம் மண்டைகாடு பகவதி அம்மன் கோவில், நெய்யூர் மருத்துவமனை, பத்மானபபுரம் அரண்மனை, மணவாளகுறிச்சி மணல் ஆலை போன்ற முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் அலுவலகத்துக்கு இந்த ரயில் நிலையம் நுழைவாயிலாக அமைந்துள்ளன. இந்த இரயில் நிலையம் அருகில் பல்வேறு பள்ளி மற்றும் கல்விநிறுவனங்களும் அமைந்துள்ளது. கல்குளம் தாலுகாவில் உள்ள 25 வருவாய் கிராமங்கள் மற்றும் குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சிகளை சார்ந்த 6,03,918 மக்கள் தொகை பயணிகளுக்கு இந்த இரயில் நிலையத்தை மட்டுமே இரயில் பயணத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த இரயில் நிலையத்தை தினமும் சுமார் 2000 முதல் 4000 பயணிகள் உபயோகபடுத்துகின்றனர். தற்போது இரணியல் இரயல் நிலையம் மூலம் இரயில்வேத்துறைக்கு மாதத்துக்கு 25 லட்சங்கள் வருமானம் ஈட்டிவருகிறது.
கல்குளம் தாலுகாவை சார்ந்த பயணிகள் தங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு செல்ல திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி இரயில் மட்டுமே உள்ளது. இந்த இரயில் இரணியல் இரயில் நிலையத்துக்கு இதுவரை தற்காலிக நிறுத்தமாகவே நின்று செல்கிறது. இரணியல் இரயில் நிலையத்துக்கு கிடைக்கும் வருவாயில் இந்த அனந்தபுரி இரயில் மூலமாகவே கிடைக்கும் வருவாய் மிக அதிகம் ஆகும். இந்த இரயில் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி வரை மட்டுமே இரணியல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 30-ம் தேதிக்கு பிறகு கல்குளம் தாலுகாவை சார்ந்த பயணிகள் சென்னைக்கு செல்ல இந்த இரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த தாலுகாவை சார்ந்த பயணிகள் இந்த இரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் குழித்துறை அல்லது நாகர்கோவில் சென்றால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆகவே இந்த திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி இரயிலை இருமார்க்கங்களிலும் நிரந்தரமாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Thanks & Regards,
P.Edward Jeni
Secretary
Kanyakumari District Railway Users' Association (KDRUA)

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision