நாகர்கோவிலில் இருந்து ஐதராபாத்துக்கு புதிய ரெயில்

New Vision
நாகர்கோவிலில் இருந்து ஐதராபாத்துக்கு புதிய ரெயில்
21-05-2014
நாகர்கோவிலில் இருந்து ஐதராபாத்துக்கு வாரத்திற்கு 2 முறை சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டது. எனவே ஐதராபாத்திற்கு புதிய ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினரும், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதற்கிடையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நாகர் கோவிலில் இருந்து ஐதராபாத்துக்கு புதிய ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து ஐதராபாத்துக்கு காலை 8.10 மணிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா இன்று நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நடந்தது.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நடந்த தொடக்க விழாவில், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் சுமித்ரா, பீர் முகம்மது, பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ராசிபுரம், சேலம், ஜோலார் பேட்டை, வாணியம்பாடி, காட்பாடி, சித்தூர், திருப்பதி வழியாக புதன்கிழமை மதியம் 2 மணிக்கு ஐதராபாத் அருகே உள்ள காச்சிகோடா சென்று அடைகிறது.

பின்னர் அங்கிருந்து இந்த ரெயில் புதன்கிழமை புறப்பட்டு வியாழக்கிழமை நாகர்கோவில் வந்தடையும். இந்த ரெயிலின் பயண தூரம் 1,373 கி.மீட்டர் ஆகும். பயண நேரம் 29 மணி நேரம். இந்த ரெயில் இயக்கப்படுவதால் நெல்லை, மதுரை, சேலம், திருப்பதி செல்லும் மக்கள் பயன் அடைகிறார்கள். குறிப்பாக நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு காலை 7.10 மணிக்கு பிறகு மாலைதான் ரெயில் போக்குவரத்து இருந்தது. தற்போது 8.10 மணிக்கு இங்கிருந்து ரெயில் இயக்கப்படுவதால் நெல்லை செல்லும் அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இது பயன் உள்ளதாக அமைந்துள்ளது.
New Vision

Post a Comment

Previous News Next News