இந்தியா–ஸ்பெயின் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடக்கம்

இந்தியா–ஸ்பெயின் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் இன்று தொடக்கம்

டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியா–ஸ்பெயின் இடையிலான ஆட்டம் இன்று தொடங்குகிறது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், ரபெல் நடாலுடன் மோத இருக்கிறார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்றில் இந்தியா–ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று முதல் 18–ந்தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.

5 முறை சாம்பியனான ஸ்பெயின் அணியில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால், 13–ம் நிலை வீரர் டேவிட் பெரர், பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் சாம்பியன் பெலிசியானோ லோப்ஸ், மார்க் லோப்ஸ் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். எல்லா வகையிலும் பலம் வாய்ந்த அணியாக திகழும் ஸ்பெயினுக்கே வெற்றி வாய்ப்பு என்று நிபுணர்கள் கணித்திருப்பதில் ஆச்சரியமில்லை. என்றாலும் முன்னணி வீரர்களுக்கு எதிராக மல்லுகட்ட இருப்பது இந்திய இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கும் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 203–வது இடம் வகிக்கும் இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ராம்குமார், 4–ம் நிலை வீரர் ரபெல் நடாலுடன் மோதுகிறார். சர்வதேச டென்னிஸ் உலகில் பல சாதனைகள் படைத்துள்ள ஜாம்பவான் நடாலுக்கு எதிராக, ராம்குமார் ஏதாவது ஒரு செட்டை வென்றாலே பெரிய விஷயமாக இருக்கும். முடிந்த வரை தனது முழு திறமையையும் வெளிக்காட்ட முயற்சிப்பார்.

அதன் தொடர்ச்சியாக நடக்கும் மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 137–வது இடத்தில் உள்ள இந்தியாவின் சகெத் மைனெனி, ஸ்பெயினின் டேவிட் பெரருடன் மோதுகிறார்.

காயத்தை காரணம் காட்டி ரோகன் போபண்ணா விலகி விட்டதால் இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ் இரட்டையர் பிரிவில் சகெத் மைனெனியுடன் கைகோர்த்துள்ளார். இவர்கள் நாளை நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் (இரவு 7 மணிக்கு தொடக்கம்) ஸ்பெயினின் பெலிசியானா லோப்ஸ்– மார்க் லோப்ஸ் இணையை எதிர்கொள்கிறார்கள். நாளை மறுதினம் நடைபெறும் மாற்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் மைனெனி–நடால், ராம்குமார்– டேவிட் பெரர் மோதுவார்கள். 5 ஆட்டங்களில் குறைந்தது 3–ல் வெற்றி பெறும் அணி உலக குரூப்பின் பிரதான சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision