பெங்களூருவில் 144 தடை உத்தரவு 25–ம் தேதி வரை நீட்டிப்பு
பெங்களூருவில் 144 தடை உத்தரவு வருகிற 25–ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கடந்த 12–ந்தேதி வன்முறை ஏற்பட்டதால் 144 தடை உத்தரவும், 16 போலீஸ் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அமைதி திரும்பியதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் வருகிற 25–ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக் தெரிவித்து உள்ளார்.
பெங்களூருவில் அமைதி திரும்பி இருந்தாலும், தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் வருகிற 20–ம் தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருப்பதாலும், நேற்று கன்னட அமைப்பினரின் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றதாலும், தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடப்பதாலும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கிடையே காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வக்கீல்கள், ‘வருகிற 19–ந்தேதி காவிரி மேற்பார்வை குழு கூட்டமும், 20–ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையும் நடைபெற உள்ளது.
கர்நாடக அணைகளில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது, கர்நாடகத்திற்கு எவ்வளவு நீர் தேவை, தமிழ்நாட்டிற்கு இதுவரை எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது, அங்குள்ள அணைகளில் நீர் இருப்பு குறித்த அனைத்து விவரங்களையும் முழு ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டிலும், மேற்பார்வை குழு கூட்டத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அனுப்புமாறு வலியுறுத்த வேண்டும்’ என்று ஆலோசனை கூறியதாக தெரிகிறது.
Post a Comment