மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடு ஆகியவற்றில் திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
இதேபோல், 2 நாட்களுக்கு முன் குழித்துறை ஆற்றில் குளிக்க சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். ஆனால், இன்னும் இந்த சம்பவங்களில் தொடர்புடைய யாரும் சிக்கவில்லை.
இந்நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு கடையில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியை சேர்ந்தவர் நேசையன் (வயது 51). இவர் பயணம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மேஜையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நேசையன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபரின் உருவம் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அந்த நபர் வேட்டி–சட்டை அணிந்து தலையில் துண்டால் முக்காடு போட்டுக்கொண்டு கடைக்குள் புகுந்து எந்தவித பதற்றமும் இல்லாமல் பணத்தை கொள்ளையடித்து விட்டு வாழை பழத்தை சாப்பிடுவது பதிவாகி உள்ளது.
அதனால், இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கேமரா பதிவை வைத்து மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Post a Comment