தமிழகத்தை சேர்ந்த மாணவருக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் ‘கூகுள்’ நிறுவனத்தில் வேலை

New Vision
சென்னை மேற்கு அண்ணாநகர், 6-வது தெருவில் வசிப்பவர் கே.என்.பாபு. ரெயில்வே துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவரும், தமிழக அரசு துறையில் உயர்ந்த பதவியில் உள்ளார்.
இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அமெரிக்காவில் தங்கி பணிபுரிகிறார். இளைய மகன் ‌ஷியாம். இவர்தான் ‘கூகுள்’ நிறுவனத்தில் தன்னுடைய சொந்த முயற்சியால் தற்போது முத்திரை பதித்து இருக்கிறார். 12-ம் வகுப்பு வரை சென்னையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் ‌ஷியாம் படித்து முடித்தார். மேல் படிப்புக்காக ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றி கண்டார்.

ஐ.ஐ.ஐ.டி. பெங்களூருவில் ஐ.எம். டெக் 5 ஆண்டு படிப்பை தேர்வு செய்து, கடந்த 2014-ம் ஆண்டு முதல் படித்து, இந்த மாதத்தில்தான் தன்னுடைய படிப்பை முடித்து இருக்கிறார். படிக்கும் காலத்திலேயே ‘கோடிங்’ தொடர்பான போட்டிகளில் நண்பர்களுடன் சேர்ந்து பங்கு பெற்று இருக்கிறார். இதுதான் கூகுள் நிறுவனத்தில் அவர் சேருவதற்கு பெரிய அடித்தளமாக இருந்தது என்று அவர் கூறினார்.

தன்னுடன் படித்த மாணவர் ஒருவர், கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து, அதில் வெற்றியும் கண்டார். அவருடைய வழிகாட்டுதலின்படியே, கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக ‌ஷியாம் விண்ணப்பித்தார். அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் ஆன்லைன் வீடியோ மூலம் நேர்முகத்தேர்வை எதிர்கொண்டார். பின்னர் ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் கூகுள் நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வில் நேரடியாக கலந்து கொண்டார்.

இந்நிலையில் அவரை ‘கூகுள்’ நிறுவனம், வேலைக்காக தேர்வு செய்து இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை அவருக்கு அண்மையில் தெரிவித்து இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில், போலந்து நாட்டில் பணியாற்றுவதற்காக ‌ஷியாம் அக்டோபர் மாதம் செல்ல இருக்கிறார்.
 
இதுகுறித்து மாணவர் ‌ஷியாம் கூறியதாவது:- உண்மையாகவே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகள் போதாது. கூகுள், பேஸ்புக் நிறுவனங்களில் வேலை பார்க்கவேண்டும் என்பது என்னுடைய கனவு, ஆசை. அந்த கனவும், ஆசையும் இன்று நிறைவேறிவிட்டது. இதற்கு என்னுடைய அப்பாவும், அம்மாவும்தான் காரணம். அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவிக்கிறேன்.

கூகுள் நிறுவனத்தின் ‘கிளவுடு பிளாட்பார்ம்’ துறையில் என்னுடைய பணியை தொடர இருக்கிறேன். கூகுள் நிறுவனத்தில் நேரடி பணி நியமனம் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. ஆனால் அதற்கு ஏற்றாற்போல் முயற்சி செய்தால், எளிதாக்கிவிடலாம். அதை நான் செய்தேன். மேலும் என்னுடைய திறமையை வளர்த்து கொண்டு, கூகுள் நிறுவனத்தில் நல்ல நிலைக்கு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
New Vision

Post a Comment

Previous News Next News