சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயில்
வரலாறு
சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்“தான்.
மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். ஒரு சமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க,”ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது” என்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க,மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டி, தூங்கச் செய்தாள்.சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வந்து வேண்ட, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகம் மகிழ்ந்து, மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு, முப்பெரும் கடவுளரும் வழிபடப்பட்டு வருகின்றனர்.
மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்”என்னும் நாமம் தாங்கி காட்சியளிக்கும் தலம்.அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் “சசீந்திரம்” என பெயர் வழங்கலாயிற்று. அனுசூயாதேவி, சிவன், பிரம்மா,விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும்.
இங்குள்ள அனுமன் சிலை மிகவும் அழகானது.பிரம்மாண்டமானது. இதன் உயரம் 18 அடியாகும். பெரிய அனுமன் சிலையும், இறைவன் ஊர்தியாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசைத் தூண்களும்,மண்டபங்களின் கட்டழகும் இங்கு சிறப்பாகும். எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார்.
அனைத்து கடவுள்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுசீந்திரம் கோவில் உயரமான ஏழு நிலைக் கோபுரத்தை முகப்பில் கொண்டது. கோயிலின் பரப்பளவு 5,400 சதுர அடி. அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி. இதனை நாஞ்சில் நாட்டின் பல பகுதிகளில் நின்றும் காணலாம். கோபுர உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதிகளையும் கன்னியாகுமரிக் கடற்கரையினையும் கண்குளிரக் காணலாம். கோயிலின் அகச்சுற்று மண்டபம் பரப்பிலும் அழகிலும் ராமேஸ்வரம் அகச்சுற்று மண்டபத்திற்கு இணையானது.
கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பத்தை“விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள். இதுவன்றி, ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணபதியும், அவருக்கு இடப்பக்கத்தே அன்னை பார்வதியும் உள்ளனர்.இவைகள் வேறெங்கும் காணவியலா காட்சி. ஒரே கல்லில் செதுக்கிய நவக்கிரகங்களின் சிற்பங்களை மேற்கூரையில் அமைத்துள்ளனர். 2000 ஆண்டுகள் பழமையான கொன்றை அடி தெற்கே உள்ளது. வடக்கே மாக்காளை எனும் நந்தியும், 18 அடி உயரமுள்ள அநுமனின் சிற்பமும் உள்ளது. நந்திக்கு தெற்கே கொன்றையடி நாதர் கோயில் உள்ளது. சுயம்பு இலிங்கமாக கொன்றை மரத்தடியில் வீற்றுள்ளார்.
குலசேகர மண்டபத்தின் கீழ்புறத்தில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது. சித்திர சபையில் சுவற்றை ஒட்டி, இராமபிரானின் கருவறைக்கு எதிரில் அநுமன் நெடிதுயர்ந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது இச்சிலை கிட்டியதாம். கருவறையில் தாணுமாலயப் பெருமான் இரண்டரை அடி உயரமுள்ள இலிங்க உருவில் அமைந்து அருள் பொழிகிறார். இலிங்கத்தின் மேலே 16 சந்திர கலைகளுடன் படம் விரித்த நாகம். திருவிளக்கு பூசையில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவது அவர்களின் நம்பிக்கையின் அடையாளம்.
சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது“தாணுமாலயத் தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது.
திருவிழா:
சித்திரை மாதம் தெப்பத்திருவிழா - 1 நாள்
ஆவணி பெருநாள் திருவிழா - 9 நாள்
மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள்
மாசி திருக்கல்யாண திருவிழா - 9 நாள்
பிரார்த்தனை:
ஆவணி பெருநாள் திருவிழா - 9 நாள்
மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள்
மாசி திருக்கல்யாண திருவிழா - 9 நாள்
பிரார்த்தனை:
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தவிர உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பட்டு உடைகள் படைத்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தருதல், அபிஷேக ஆராதனைகள், இறைவனுக்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்தலாம். ஸ்ரீராம ஜெயம் எழுதி சாத்தலாம். பொருள் படைத்தோர் அன்னதானமும்,திருப்பணிக்கு பொருளுதவியும் செய்யலாம்.
வழிகாட்டி:
திருநெல்வேலியிலிருந்து (70 கி.மீ.)தூரத்தில் சுசீந்திரம் உள்ளது இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் பஸ்களில் செல்லலாம். நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ.தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ.தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது.
Thanks to koyil.siththan
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், கேரளபுரம்
வரலாறு
வீரகேரளவர்மா என்ற மன்னர், இராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக இராமேஸ்வரம் சென்றார்.அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். இராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது.நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். இது என் பரிசாக இருக்கட்டும் என்றார்.கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்துப் பராமரித்தார். நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர்,தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.
கேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான தட்சிணாய காலத்தில் கறுப்பு நிறமாகவும் மாறி பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்தப் பிள்ளையாரைத் தரிசிக்க வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் வந்து தரிசித்து பேறு பெறுகிறார்கள். முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு, தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் சூடுகிறார். இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி உருவாக்கப்பட்ட கல் இந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
திருவிழா:
விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி.
கோரிக்கைகள்:
இங்குள்ள விநாயகரை வழிபட வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில், நாகர்கோவில்
தல வரலாறு
பெண் ஒருத்தி வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில், ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள்,ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள். அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததைக் கண்டனர். பின்பு நாகராஜரைச் சுற்றிலும் ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா, இங்கு வந்தார்.சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோயில் எழுப்பினார்.சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கும், “நாகர்கோவில்”என பெயர் வந்தது. தமிழகத்தில் நாகர் (பாம்பு)வழிபாட்டிற்கென அமைந்த பெரிய கோயில் நாகர்கோவில் மட்டுமே ஆகும்.
சிவனுக்கு நந்தி, பெருமாளுக்கு கருடாழ்வார்,விநாயகருக்கு மூஞ்சூறு, முருகனுக்கு மயில் என ஜீவராசிகளை சுவாமிகளின் வாகனமாக்கி வழிபடுகிறோம். இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனியே கோயில்கள் அமைத்து வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால், நாகத்திற்கு சன்னதி அமைத்து வணங்குகிறோம். நாகர் வழிபாடு, மனித வாழ்விற்கான உயர்ந்த தத்துவத்தை உணர்த்துகிறது. புழுதியில் சென்றாலும், நாகத்தின் மீது தூசு ஒட்டுவதில்லை.அதாவது தான் எதில் இருந்தாலும், அதைத் தன்னில் ஏற்றுக்கொள்ளாத தன்மையுடையதாக நாகம் இருக்கிறது. மனிதர்களும் மனைவி, மக்கள், பொன்,பொருள் என எல்லாவற்றிலும் உழன்றாலும், அவற்றின் மீதும் பற்றில்லாதவர்களாக வாழ வேண்டும் என்பதை நாகம் உணர்த்துகிறது.
மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சண்டி, முண்டி என்பவர்களும், பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் என்பவர்களும் துவாரபாலகர்களாக இருப்பர். ஆனால், இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளன.நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால்,நாகங்களையே துவாரபாலர்களாக அமைத்துள்ளனர்.நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். தற்போதும் இங்கு நாகங்கள் வசிப்பதாகவும், இவையே இக்கோயிலைப் பாதுகாப்பதாகவும் சொல்கிறார்கள். நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து, புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர்.
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன், அவர் இராமனாக அவதாரம் எடுத்தபோது தம்பி இலட்சுமணராக பிறந்தார். எனவே,இலட்சுமணரின் நட்சத்திரமான ஆயில்யத்தன்று நாகராஜாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இராகு,கேது தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் நாகராஜாவிற்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள்.இதுதவிர, தினமும் காலை 10 மணிக்கு பாலபிஷேகம் நடக்கும். நாகராஜரிடம் வேண்டி கோரிக்கை நிறைவேறியவர்கள் பால் பாயாசம் படைத்தும் வழிபடுகிறார்கள். கோயில் வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் நாகர் சிலைகளை வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவதுண்டு.
மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. வயல் இருந்த இடம் என்பதால்,இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாகத் தருகிறார்கள். தட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) இந்த மணல் கருப்பு நிறத்திலும், உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை) வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு.
இந்தக் கோயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதற்கான காரணம் என்ன தெரியுமா? ஆவணி மாதம் மழைக்காலமாகும்.இக்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமிருக்கும்.இவற்றால் விவசாயிகளுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆவணியில் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாம்பு வழிபாடு மேற்கொண்டனர். நாகர் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மகிழ்வித்தனர்.இராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதாலும், மலையாள ஆண்டில் முதல் மாதம் ஆவணி என்பதாலும், இந்த மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளை சிறப்பு வழிபாட்டுக்குரிய காலமாக கொண்டனர் என்றும் ஒரு கருத்து உண்டு.கேரள முறைப்படி இக்கோயிலில் பூஜை நடக்கிறது.
நாகராஜர் சன்னதிக்கு வலப்புறம் அனந்தகிருஷ்ணர்,காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜை செய்தபின்பு, இவர்களுக்கு பூஜை நடக்கும். அர்த்தஜாம பூஜையில் மட்டும்,அனந்தகிருஷ்ணருக்கு முதல் பூஜை செய்வர்.இக்கோயிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும்,அனந்தகிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதத்தில் பிரம்மோற்ஸவமும் இவருக்கே நடக்கிறது.தைப்பூசத்தன்று இவர் தேரில் எழுந்தருளுவார்.ஆயில்யத்தன்று ஆராட்டு வைபவம் நடக்கும்.கிருஷ்ண ஜெயந்தி விழாவும் இவரது சன்னதியில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
பெருமாள் கோயில் கொடிமரங்களின் உச்சியில்,கருடனை வடிவமைப்பர். இங்குள்ள அனந்த கிருஷ்ணர் சன்னதி கொடிமரத்தில் கருடனுக்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர். பாம்பும், கருடனும் விரோதிகள் என்பதால் கருடனை இங்குள்ள கொடிமரத்தில் வடிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர். விசேஷ காலங்களிலும்,மாதாந்திர ஆயில்ய நட்சத்திர நாட்களிலும் அனந்தகிருஷ்ணர் ஆமை வாகனத்திலேயே புறப்பாடாகிறார். தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்ததன் அடிப்படையில் ஆமையை வடிவமைத்ததாகச் சொல்கிறார்கள்.
இது கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும், தெற்கு வாசலே பிரதானமாக இருக்கிறது. இந்த வாசலை, “மகாமேரு மாளிகை” என்று அழைக்கிறார்கள். மாளிகை வடிவில் உயரமாக அமைந்த வாசல் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. நாகராஜர் சன்னதியின் இடப்புறம் நாகர் தீர்த்தம் இருக்கிறது. ஓடவள்ளி என்னும் கொடி இத்தலத்தின் விருட்சம். தற்போது இக்கொடி இல்லை.வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. இதில் பூக்கும் நாகலிங்கப் பூவை நாகராஜரின் குறியீடாகக் கருதி வழிபடுகிறார்கள்.
கோயில் வளாகத்தில் துர்க்கை சன்னதி இருக்கிறது.இச்சிலை இங்குள்ள நாகர் தீர்த்தத்தில் கிடைத்ததால் இவளை “தீர்த்த துர்க்கை” என்று அழைக்கிறார்கள்.இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகராஜரையும், இவளையும் வழிபடுகிறார்கள். வயது முதிர்ந்த பெண்களை“அம்மச்சி” என்று மலையாளத்தில் அழைப்பது வழக்கம்.இந்த துர்க்கையையும், தங்களுக்கு வழிகாட்டும் பெரியவளாகக் கருதி, “அம்மச்சி துர்க்கை” என்று அழைக்கிறார்கள். தனித் தனி சன்னதியில் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணர், கன்னிமூல கணபதி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் காவல் தெய்வமான நாகமணி பூதத்தான், சாஸ்தா,பாலமுருகன் சன்னதிகள் உள்ளன.
திருவிழா:
தை மாதத்தில் பிரம்மோற்ஸவம், ஆவணி ஞாயிறு,ஆவணி ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விசேஷ பூஜை, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி,திருக்கார்த்திகை.
வேண்டுகோள்:
நாக தோஷம், இராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இக்கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்
நேர்த்திக்கடன்:
இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் நாகராஜருக்கு பால் பாயாசம் படைத்து, பாலபிஷேகம் செய்வித்தும், கோயில் வளாகத்தில் நாகபிரதிஷ்டை செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம்
தலவரலாறு
ஒரு காலத்தில் சுசீந்திரம், ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது.சப்தரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவவடிவில் அவர்களுக்குக் காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனைத் திருமாலின் உருவிலேயே காண, சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்திற்கு சென்று தவம் செய்தனர். அவர்களது தவத்துக்கு இரங்கிய இறைவன், திருமாலின் உருவில் காட்சி தந்தார்.அவ்வுருவில் அங்கு தங்கியருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற, திருமால், சப்தரிஷிகள் சூழ,பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார் என்பர்.
திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கிரங்கி,”உங்கள் எண்ணம் நிறைவேறும். யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காக் கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்)திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறி மறைந்தார். சில நாட்களில் உதயநங்கை கருவுற்றாள். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார்.குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளிய மரத்துக்குப் பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏறி, தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞானமுத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளி இருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது. இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகவும், ஆழ்வார்திருநகரி அவர் ஞானம் பெற்ற தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.
மூலவரான திருவாழ்மார்பர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் “கடு சர்க்கரை யோகம்” என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது. கல்லும்,சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர். அதனால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே அபிஷேகம்.
திவ்ய தேசங்களில் ஒன்று. கோலம்-அமர்ந்த கோலம். இங்குள்ள மூலவர் திருவாழ்மார்பர். இங்கு தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. இலட்சுமித் தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். பெருமாள் இலட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன், தங்கமாலை ஒன்றை அணிந்துள்ளார்.
பாடியவர்கள்:
நம்மாழ்வார் மங்களாசாசனம்
வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என் திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வதென் உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு ஒருபாடுழல்வான் ஒரடியாணுமுள னென்றே.
-நம்மாழ்வார்
திருவிழா:
திருமால், குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா. புரட்டாசி சனி, ஆவணி திருவோணம்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், செல்வச்செழிப்புடன் வாழவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபடுதல். திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்ய நினைப்பவர்கள் இத்தலப் பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்யலாம்.
இருப்பிடம் :
நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ., தொலைவிலுள்ள திருப்பதிசாரத்துக்கு மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் உள்ளன.
அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருவட்டாறு
வரலாறு
பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர்.இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளைப் பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும்,தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி, இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் “வட்டாறு”என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், “மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்” எனப் பாடுகிறார்.கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப்பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன.(இது வைணவர்களின்கூற்று. சைவர்களின் கதையோ வேறு). மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில், அளவில் மிகப்பெரியவர். இவர் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் முத்திரை காட்டி, தெற்கே தலைவைத்தும், வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அரிது. தாயார் மரகதவல்லி நாச்சியார்.
108 திருப்பதிகளை தரிசனம் செய்பவர்கள் திருவனந்தபுரம் பத்மநாபரை தரிசிப்பதற்கு முன், ஆதிகேசவப்பெருமாளை தரிசிப்பது சிறப்பு.
இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார். பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால், மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம். கருவறையில் கருடன், சூரியன்,பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.
பாடியவர்கள்:
நம்மாழ்வார் மங்களாசாசனம்
வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே.
-நம்மாழ்வார்
திருவிழா:
ஓணம், ஐப்பசி பிரமோத்சவம், புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.
பிரார்த்தனை:
கேட்டதையெல்லாம்(நியாயமானவை) கொடுக்கும் பெருமாள்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து வழிபடுதல்
வழிகாட்டி:
நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருவட்டார் அமைந்துள்ளது.
அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி
வரலாறு
நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது.மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்‘என்ற பெயர் வந்ததாம்.
“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப் …..
………(சிலப்பதிகாரம்)
இதன் மூலம் “இயக்கி” என்னும் பெண் தெய்வம் இருந்ததத உணரமுடிகிறது. “இயக்கி“யே “இசக்கி“யாக மருவியதோ?
அகராதி “இசைக்கி” என்ற சொல்லுக்கு “மனதைக் கவர்பவள்”என்ற பொருளைத் தருகிறது. இசக்கி அம்மனை நீலி என்னும் பேய் தெய்வமாக கருதுகின்றமை வில்லுப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.
முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித் தாள். இவளின் மகள் இசக்கி.இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.
எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள்.இசக்கியின் ஊரிலேயே அவர் களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது.
மனைவியின் மேல் பிரியமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்ட செட்டியாரின் மகன், அவளது சொத்தை அபகரிக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தான்.
அன்றைய தினம்… முப்பந்தலில் மூவேந்தர்களுக்கும் மத்தியஸ்தம் நடந்தது. இதைக் காண்பதற்காக இசக்கியை அழைத்துச் சென்றான் செட்டியார் மகன். வழியில், பயணக் களைப்பும் தாகமும் சேர்ந்து அவளை வாட்டின. உடனே அந்த இடத்தில் மணலை குவித்து, இசக்கியை அதில் படுக்கச் சொன்ன செட்டியார் மகன், தண்ணீர் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றான். அப்படியே உறங்கிப்
போனாள் இசக்கி. திரும்பி வந்த செட்டியார் மகன், இதுதான் தக்க தருணம் என்று கருதி பாறாங்கல்லைத் தூக்கி இசக்கியின் தலையில்போட்டான். துடிதுடித்து இறந்தாள் இசக்கி.
பிறகு, தனக்கும் தாகம் எடுக்கவே தண்ணீரைத் தேடி ஓடினான்.சிறிது தூரத்தில் பாழடைந்த கிணறு ஒன்றைக் கண்டவன்,அதிலிருந்து தண்ணீர் சேகரிக்க முயன்றான். அப்போது,கருநாகம் தீண்டி அந்த இடத்திலேயே விழுந்து இறந்தான்.
இந்த நிலையில், தெய்வப் பிறவியான இசக்கி,சிவபெருமானிடம் சென்று தன் கணவனே தன்னைக் கொன்ற விவரத்தைக் கூறி நியாயம் கேட்டாள். அவளிடம், “அவன் செய்த பாவத்துக்கு அவனும் பலியாகி விட்டான்” என்றார் சிவன்.ஆனாலும் இசக்கி சமாதானம் அடையவில்லை.
“என்னை நம்ப வைத்து சாகடித்தவனை, நானே பழி தீர்க்க வேண்டும். எனவே, என்னையும் அவனையும் உயிர்த்தெழச் செய்யுங்கள்” என்று வேண்டினாள். ‘அப்படியே ஆகட்டும்‘ என அருளினார் சிவன்.
அதன்படி, கிணற்றடியில் இறந்து கிடந்த செட்டியார் மகன் தடாலென எழுந்து வீட்டுக்குச் சென்றான். இசக்கியோ, பிறந்த வீட்டுக்கும் செல்லாமல், புகுந்த வீட்டுக்கும் போகாமல் கணவனை அழிப்பதற்காக சுற்றித் திரிந்தாள்.
மாதங்கள் கடந்தன. ஒரு நாள், பழவூர் நோக்கி ஆவேசத்துடன் கிளம்பினாள் இசக்கி. வழியில், கள்ளிச்செடியை ஒடித்துத் தனது கக்கத்தில் வைத்துக் கொண்டாள். அந்தச் செடி, குழந்தையாக மாறியது.
குழந்தையுடன் பழவூர் மந்தைக்கு வந்தவள், ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டினாள். “உங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவன்,என்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு, இங்கு வந்து விட்டான். என்னையும் அவனையும் சேர்த்து வையுங்கள்” என்று முறையிட்டாள்.
பஞ்சாயத்தார், “உன் கணவன் யாரென்று சொல்” என்றனர்.உடனே குழந்தையைத் தரையில் இறக்கி விட்டவள், “இந்தக் குழந்தை தன் தகப்பனை அடையாளம் காட்டும்” என்றாள்.அதன்படி, கூட்டத்தில் இருந்த செட்டியார் மகனை, ‘அப்பா‘ என்று அழைத்தபடி அவனிடம் சென்றது குழந்தை. உடனே,இருவரையும் சேர்த்து வைப்பது எனப் பஞ்சாயத்தார் முடிவு செய்தனர். “கொலை செய்யப் பட்டவள் உயிருடன் எப்படி வந்தாள்?” என்று குழம்பித் தவித்தான் செட்டியார் மகன்.பஞ்சாயத் தாரும் ஊர்மக்களும் சேர்ந்து, இருவரையும் ஒரு வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டினர். தவிர, வீட்டுக்கு வெளியே காவலுக்கும் நின்றனர்.
வீட்டுக்குள் விசுவ ரூபமெடுத்து தன்னை வெளிக் காட்டினாள் இசக்கி. அரண்டு போன செட்டியார் மகன் அவளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ஆனால் மனம் இரங்காத இசக்கி,விடிவ தற்குள் அவன் கதையை முடித்துவிட்டு வெளியே வந்தாள். ஆனாலும் அவளது கோபம் தணியவில்லை. பழவூர் கிராமத்தையே தீக்கிரையாக்கினாள். எரிந்து சாம்பலாகும் ஊரைப் பரவசத்துடன் பார்த்தவள், நீலி கோலத்துடன் மேற்கு நோக்கி நடந்தாள்.
அன்று முப்பந்தல் கிராமத்தில் மூவேந்தர்களும் ஒளவையும் கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப் போது, அந்த வழியே நீலிக் கோலத்தில் செல்லும் இசக்கியைப் பார்த்த ஒளவை பிராட்டியார்,அவளை அழைத்து சாந்தப்படுத்தி, “இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்” என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள்.ஊரைக் காக்கும்தெய்வமானாள். முப்பந்தலில் குடியேறியதால், “முப்பந்தல் இசக்கியம்மன்” என்று பெயர் கொண்டாள்.
இதன் பிறகு இசக்கியின் அண்ணன் களான சுடலைமாடன்,பட்டவராயன் இருவரும் அவளுக்குத் துணையாக அவளது வாசலிலேயே குடியேறினர். துவக்கத்தில் இசக்கியம்மனுக்கு ஒரேயொரு கோயில் மட்டுமே இருந்தது. பின்னர், பூர்வீக கோயிலுக்கு அருகிலேயே புதிய கோயில் ஒன்றையும் எழுப்பினர்.
பொதுவாக இசக்கி அம்மனின் வடிவம் ஒரு கை இடுப்பைப் பிடித்தபடியும், மறுகை ஒரு குழந்தையை இடுப்பில் இடுக்கியபடியும் இருக்கும். வாய் அகலத் திறந்திருக்கும்,கழுத்தில் அழகிய ஆபரணங்கள் வரையப்பட்டிருக்கும்.பார்ப்பதற்கு இந்த உருவம் கொடூரமாகக் காணப்படும். இதற்கு நேர்மாறான சாந்த வடிவமும் சில இடங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான இசக்கி வடிவங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவையே. கல்வடிவ இசக்கியம்மன் கோயில்கள் காலத்தால் பிற்பட்டவையாகும்.
பூர்வீக கோயிலின் முக்கிய கருவறையில் இசக்கியம்மன் இருக்கிறாள். இந்த சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில்,குழந்தை வரம் வேண்டி பக்தர்களால் கட்டப்பட்ட பிரார்த்தனைத் தொட்டில்கள் உள்ளன. இந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தால், முகப்பு மண்டபம். இங்கு கிழக்கு நோக்கி நிற்கிறார் சுடலைமாடன். பூர்வீகக் கோயில், வீடு போன்ற அமைப்பில் உள்ளது.
புதிய கோயில் கோபுரத்துடன் காட்சி தருகிறது. கருவறையில் மூலவ மூர்த்தமாக காட்சி தருகிறாள் இசக்கி அம்மன். இவளுக்கு வலப் புறம் பிராமணத்தி அம்மன். கருவறையின் வெளிச் சுற்றில் விஷ்ணு துர்கை மற்றும் வைணவிதேவியை காணலாம்.மேற்கு பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், ஒளவையாரம்மன்,பாலமுருகன் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர்.கோயில் முகப்பில் கிழக்கு நோக்கி சுடலைமாடன்; எதிரே பட்டவராயர்.
இங்கு எழுந்தருளிக்கும் இசக்கியம்மனைப் பங்காளிகள் சொத்தினைப் போல் பங்கிட்டு இரு கோயில்களாக்கி வழிபட்டு வருகின்றனர்.
கோயிலுக்கு சற்று தள்ளித் திறந்தவெளியில் சுமார் 133 அடி உயர இசக்கி யம்மனின் பிரமாண்ட சிலையை தரிசிக்கலாம். இங்கு,திருவிழா, கொண்டாட்டம் ஆகியவை இசக்கிக்கு இல்லையெனினும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமையில்‘ஊட்டு படைப்பு‘ வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், பகல் முழுவதும் இசக்கியம்மனுக்கும் பிற தெய்வங்களுக்கும் விசேட பூசைகள் நடை பெறும். அப்போது ஒளவையாரம்மனுக்கு கொழுக் கட்டைப் படையல் வைத்து,பூசைகள் செய்வர். அன்று இரவு 12:00 மணிக்குப் பச்சரிசி சாதம் வடித்து பல வகை காய்கறிகளுடன் கூட்டு சமைத்து படையலிடுகின்றனர். அப்போது இசக்கியம்மனுக்கு அருகில் உள்ள பிராமணத்தி அம்மனை
பிராமணர்கள் வழிபடுவர். இந்த வைபவத்தின்போது,இசக்கியம்மனின் அருளால் வேண்டுதல் பலித்த பக்தர்கள், மனித உருவ பொம்மைகளைச் செய்து எடுத்து வந்து அம்மன் வாசலில் வைக்கின்றனர்.
பிளவுக்கல் என்ற இடத்தில் இருக்கும் இசக்கி அம்மன் இருதாரத்து மக்களின் சொத்து பாகப்பிரிவினைக்காக உயரமான பாறையைச் சமமாக பிளந்து வெளிப்பட்டாள் என்ற கதையும் காணப்படுகிறது.
குழந்தை வரம், திருமண பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வு ஆகியவற்றை அருளும் இசக்கியம்மனின் மகிமையை அறிந்த கேரள மக்களும் இங்கு வந்து குழுமுகிறார்கள்.
மகிமை நிறைந்த திருஷ்டிக் கயிறு!
இசக்கியம்மன் கோயிலில் சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணங்களில் திருஷ்டிக் கயிறு வழங்குகின்றனர். 41 நாட்கள், அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூசித்துத் தரப்படும் இந்தக் கயிறைக் கட்டிக் கொண்டால், திருஷ்டி கழியும்; காத்து, கருப்பு அண்டாது என்பது நம்பிக்கை. இங்கு, திருநீறுக்கு பதிலாக மஞ்சனையை(தண்ணீரில் குழைத்த மஞ்சள்) வாழை இலையில் மடித்துக் கொடுக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இசக்கியம்மன் கோயில் கொண்டிருப்பதால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள்,மறக்காமல் அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால், தங்களுடன் வழித்துணையாக வருவாள் இசக்கியம்மன் என்பது அவர்களது நம்பிக்கை.
அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி
முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூககியது.தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். தேவர்களோடு அன்றி முனிவருக்கும் ஆன்றோருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.
“தீத்திறங்கொண்ட பாணாசுரனைப் பரசக்தியால் மட்டுமே கொல்ல முடியும்” என்று கூறிய திருமால் தேவர்களைப் பராசக்தியிடம் சரண்புக வழி கூறினார். அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒர் பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்திதேவி வெளிப்பட்டாள். பாணாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து, ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள்.
அன்று முதல் அவள் கன்னியா குமரிக்கு வந்து கடுந்தவம் புரியலானாள். நாட்கள் கடந்தன. கன்னிதேவி மணப்பருவம் அடைந்தாள். சுசீந்திரம் என்னும் இடத்திலுள்ள இறைவன் சிவபெருமான் அவள் மீது காதல் கொண்டார். அவருக்கு அவளைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அசுரர் தலைவன் ஒரு கன்னியால் தான் கொல்லப்படுவான் என்று பிரம்மதேவனால் விதிக்கப்பட்டிருந்ததால், இத் திருமணம் நிகழுமாயின்,பாணாசுரன் அழிவுக்குரிய வாய்ப்பு கெட்டுவிடும் என்று நாரதர் உணர்ந்தார். ஆகவே அவர் இத்திருமணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானார்.
அவர் பராசக்தியையும், சிவபெருமானையும் நேரில் சென்று கண்டு, திருமணம் குறிப்பிட்ட ஒர் நாளில், நள்ளிரவில், ஒரு நல்வேளையிலேயே நிகழ வேண்டும், அதற்கு ஆயத்தமாக இருங்கள் என கூறினார். குறித்த இரவில், நல்லநேரம் தவறிவிடக் கூடாதெனக் கருதிச் சிவபெருமான் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டார். போகும் வழியில்,வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் ஒர் சேவல் உருக்கொண்டு உரக்கக் கூவினார்.
பொழுது புலர்ந்து விட்டதெனத் தவறுதலாகப் புரிந்து கொண்ட சிவபெருமான் சுசீந்திரத்திற்கு வருத்தத்துடன் திரும்பினார்.தேவியும், அதன் பின் என்றும் கன்னியாகவே இருப்பதாக முடிவு செய்து, தவத்தை தொடர்ந்தாள்.
திருமணத்திற்கென்று செய்யப்பட்ட உணவுப் பொருள்யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே,இன்றும், குமரிக்கடல் துறையில் அரிசி போன்ற வெண் சிறுமணலும், வேறுவகையான பலவண்ண மணலும் மிகுதியாகக் கிடப்பதைக் காணலாம்.
இவ்வாறு தேவி கடுந்தவமிருக்கும்போது, ஒரு நாள், பாணாசுரன் தேவியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவளை நேரில் காண வந்தான். தேவியைக் கண்டதும் அவளை மணந்து கொள்ள வேண்டினான். ஆனால், தேவி மறுத்து விடவே அசுரன் அவளைத் தன் உடல் வலிமையால் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான்.
இத்தகைய தருணத்தை எதிர்நோக்கியிருந்த தேவியும் தன் போர்வாளை வீசினாள். நெடுநாட்கள் இருவரும் கடும் போர் புரிந்தனர். இறுதியில், தேவி தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றொழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தியருளியபின் மீண்டும் தன் தவத்தை மேற்கொள்ளத் தொடங்கினாள்.
குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.
பரசுராமர் தேவிகுமரியின் தெய்வ உருவை இங்கு அமைத்து வழிபட்ட தலம். இக் கோயில் இந்தியா முழுமையும் பரந்த புகழுடையது.
கடல் முனையில் இருந்தாலும் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் உப்புக் கரிக்காத நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிசயம்.
முன்பிருந்த கோயில் கடல் கொண்டு விட்டது. இப்போதிருப்பது இரண்டாவதாக நிறுவனம் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் :
1892ல் சுவாமி விவேகானந்தர் தனது யாத்திரையின் போது குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தியானம் செய்தார். அவர் நினைவாக இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக,பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது.மிகவும் கலைநுணுக்கத்துடன் கூடிய இச்சிலையை அருகில் சென்று பார்க்கப் படகு போக்குவரத்து வசதி உள்ளது. கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை காண்போர் கண்களை வியக்க வைக்கும்.
இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென் கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலாதலம் கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பௌர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம்.
1984ல் அண்ணல் காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது.அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது.
திருவிழா:
புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள். வைகாசி விசாகம் - 10 நாள்.
தேரோட்டம், தெப்போத்சவம்:
10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக மிதப்பில் கொண்டு செல்லப்படும்.
கன்னிகா பூசை, சுயம்வர பூசை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும்.
காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது.
இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.
அம்மனுக்கு விளக்கு போடுதல் , அம்மனுக்கு புடவை சாத்துதல்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான திருமுழுக்காட்டு, ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக செய்கின்றனர்.
வடஇந்தியர்கள் வருகை அதிகம் உள்ள கோயில்.
இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும் தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.
வழிகாட்டி :
சுற்றுலா தலம் என்பதால் தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து கன்னியாகுமரிக்கு நிறைய பேருந்து வசதி உள்ளது.
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
நாகர்கோவிலிலிருந்து -25 கி.மீ.,
திருநெல்வேலியிலிருந்து -91 கி.மீ.,
மதுரையிலிருந்து - 242 கி.மீ.,
கன்னியாகுமரி,நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு புகைவண்டி இணைப்பு உள்ளது.
Post a Comment