நாகர்கோவிலில் ஆட்டோ சவாரிக்கு சிறப்பு “செயலி”: மாநகராட்சி அறிமுகம் செய்கிறது

நாகர்கோவிலில் ஆட்டோ சவாரிக்கு ஆன்லைன் மூலம் அழைக்கும் வகையில் சிறப்பு செயலி (Application) மாநகராட்சியால் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் பிற நகரங்களை போலவே நாகர்கோவிலிலும் ஆட்டோக்கள் கட்டணம் அதிகமாக உள்ளது. இதுபோல் மிகவும் குறுகலான பிரதான சாலைகளில் ஆட்டோக்கள் நிறுத்தம் போக்குவரத்து நெருக்கடிக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. ஆட்டோக்கள் கட்டணத்தை முறைப்படுத்த பல்வேறு நுகர்வோர் அமைப்புகள் போராடி வருகின்றன. சாலை பாதுகாப்பு கூட்டத்தில், கலெக்டர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடப்படுவதும், அதன் அடிப்படையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆட்டோ டிரைவர்களை கலந்து ஆலோசித்து, வடசேரி பஸ் நிலையம், அண்ணாபஸ் நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களிலிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் ஆட்டோ பயண கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன்படி கட்டண விபர பலகை ஆட்டோ நிறுத்தங்களில் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கட்டணத்தை யாரும் வாங்கவில்லை. கூடுதலாகவே வாங்கி வருகின்றனர். கட்டண பலகையும், இருநாட்களில் பிய்த்து எறியப்பட்டு விட்டது. இதனால் ஆட்டோவில் ஏறி இறங்கினாலே ரூ.50ம், அரை கி.மீ தொலைவிற்கு கூட ரூ.60, ரூ.80 என வாங்கி வருகின்றனர். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் உள்ளது போன்று முன்கூட்டியே கட்டணம் செலுத்தி செல்லும் திட்டத்தையும் நுகர்வோர் சங்கம் பரிந்துரை செய்தது. ஆனால் இந்த கோரிக்கையும் கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தியே மக்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் நிறுவனங்கள் ஆட்டோ மற்றும் கார் சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகின்றனர். இதன்படி கட்டணம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இந்த முறை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் இதுபோன்ற திட்டங்கள் குமரி உள்பட தென்மாவட்டங்களில் இல்லை. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்துவதுடன், பிரதான சாலைகளில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதியதிட்டம் குறித்து ஆலோசித்து வருகிறார். இதன்படி ஆட்டோக்கள் அழைக்க மாநகராட்சி அலுவலகத்தில், கட்டுப்பாட்டறை அமைத்து, பயணிகள் அழைக்கும்போது, அவர்கள் அருகில் உள்ள ஆட்டோக்களை சீனியாரிட்டி அடிப்படையில், அனுப்பி வைக்கவும், கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தும் வகையிலும், திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்க பிரதிநிதிகளை அழைத்து இருதினங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் நகரில் ஆட்டோக்கள் நிறுத்தம் அமைக்க வட்டார போக்குவரத்து துறை சார்பில் வேப்பமூடு உள்பட ஒற்றை படை எண்ணிக்கையில்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, வடசேரி பகுதியில் மட்டும் 5க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன. இதில் பலவும் அனுமதி பெறாதவை. குறுகலான பிரதான சாலைகளில், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட பல விதிமீறல்கள் உள்ளன, அதில் இதுபோன்ற விதிமீறல் ஆட்டோ நிறுத்தங்களும் ஒரு காரணமாகும். ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டால், இதுபோன்று பிரதான சாலைகளில் ஆட்டோக்கள் நிறுத்த பிரச்னை இருக்காது.

வடசேரி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் வேறு ஆட்டோ வந்தால், அந்த ஆட்டோக்களில் பயணிகளை ஏற விடுவதில்லை. பயணிகளையும், அந்த ஆட்டோ டிரைவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்க முயலும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

அண்டை நகரான திருவனந்தபுரத்தில், முன்கூட்டி கட்டணம் செலுத்தி பயணித்தல் அல்லது மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் அங்கு பஸ்களை விட ஆட்டோக்களில் பயணம் செய்பவர்கள் அதிகம். அதுபோல், இங்கும் கட்டணங்களை மீட்டர் அல்லது முன்கூட்டி செலுத்துதல் திட்டம் கொண்டு வந்தால், ஆட்டோவில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயரும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், மிகவும் பிசியான குறுகலான சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஒரு ஆட்டோ மட்டுமே வாயிலில் நிற்கும். அந்த ஆட்டோ சென்றதும், அடுத்த ஆட்டோவை ஆட்டோ சங்கம் நியமித்துள்ள ஊழியரே அழைத்து நிறுத்துகிறார். இதனால் ஆட்டோக்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் என்பதே இல்லை. இதேப்போன்று இங்குள்ள அனைத்து கட்சி ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களும் இணைந்து தீர்மானிக்கலாம்.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision