Historical Info


நெப்போலியன் போனபார்ட்
நெப்போலியன் போனபார்ட் 
த்தியதரைக்கடலில் உள்ள கார்சிகா என்ற சின்ன தீவில் கார்லோ போனபார்ட் – மரியா லெட்டிஸியா ரமாலினோவுக்கும் பிறந்த எட்டுப் பிள்ளைகளில் இரண்டாவது மகன் நெப்போலியன். பிறந்த தேதி 15 ஆகஸ்ட், 1769!
கத்தோலிக்கரான நெப்போலியன் பிறப்பே ராணுவப் பின்னணியில் அமைந்துவிட்டதால் (கார்லோ போனபார்ட்தான் பிரெஞ்சு மன்னன் 16-ம் லூயியின் பிரதிநிதி- கார்சிகா தீவுக்கு). தாயின் ஒழுக்கமான வளர்ப்பில் வளர்ந்த நெப்போலியனுக்கு, அந்த வாழ்க்கை முறையே பின்னர் வெற்றிகரமான ராணுவ வீரனாகத் திகழ உதவியது.
மேற்படிப்புக்காக, 1779-ல் கார்சிகா தீவிலிருந்து பிரான்சுக்கு வந்த நெப்போலியன் பிரையன் – லெ-சாடெ ராணுவப் பள்ளியில் சேர்கிறார்.
ராணுவப் பள்ளியில் கணக்கில் புலியாகத் திகழ்ந்த நெப்போலியன், வரலாறு – புவியியலில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ, அவரது ஆச்ரியர் இப்படிச் சொல்கிறார்: ‘இந்த மாணவன் மிகச் சிறந்த மாலுமியாக வருவான்’.
ஆனால் நெப்போலியன் மாலுமியாகவில்லை. மிகச் சிறந்த தரைப்படை வீரனுக்கான பயிற்சிகளைப் பெற்று முடித்தார். தந்தை இறந்ததால், வருமானம் இல்லாமல், இரண்டு ஆண்டு கல்வியை ஒரே ஆண்டில் கற்று முடித்தார் நெப்போலியன் என்கிறது அவரே எழுதி வைத்த வரலாற்றுக் குறிப்பு.
1785-ல் நெப்போலியன் இரண்டாம் நிலை லெப்டினென்டாக பதவி ஏற்றார். பிரெஞ்சுப் புரட்சி வெடித்த 1789-ம் ஆண்டுவரை பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் அந்தப் பதவியில் பணியாற்றினார். பின்னர் இரண்டாண்டுகள் லீவெடுத்துக் கொண்டு சொந்தத் தீவுக்குப் போய் அங்கு புரட்சியாளர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சு நராணுவத்தையே எதிர்த்துப் போராடினார். பின்னர் பாரிஸ் திரும்பினார். ராணுவ அதிகாரிகளை எப்படியோ சமாளித்து 1792-ல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்று மீண்டும் கார்ஸிகா வந்தார்.
அப்போதுதான் அவருக்கும் கார்ஸிகாவின் தலைவர் பாஸ்கல் பாலிக்கும் இடையே மோதல் வலுக்க, குடும்பத்துடன் கார்ஸிகாவை விட்டே வெளியேற வேண்டிய சூழல் நெப்போலியனுக்கு. இது நடந்தது ஜூன் 1793 (வரலாறு முக்கியம்!).
புரட்சிக்காரர்களாகிய ரோபஸ்பியர் சகோதரர்களின் நட்பு கிடைத்தது நெப்போலியனுக்கு. இன்னொரு பக்கம், தனது தீவைச் சேர்ந்த வீரர் ஒருவரின் துணையுடன் டுலன் நகர குடியரசுப் படைகளின் கமாண்டராக நியமிக்கப்பட்டார் நெப்போலியன். அந்த நகரம் பிரிட்டிஷ் படைகளின் பிடிக்குள் வந்தபோது, அவர்களை வெற்றிகரமாக விரட்டியடித்து பிரிகேடியர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார்.
ஆனால் 1794-ல் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். காரணம் புரட்சிக்காரர்களுடன் அவருக்கிருந்த தொடர்புகள் என்று விளக்கமளிக்கப்பட்டாலும், அடுத்த 10 நாட்களில் ரிலீஸாகிவிட்டார்.
வென்டீ எனும் பகுதியில் நடந்த புரட்சிக்கு எதிரான படைக்கு அவரை கமாண்டராக நியமித்தார்கள். ஆனால் ஆர்டிலரி ஜெனரலாக இருந்த நெப்போலியனுக்கு அது பதவியிறக்கமே. எனவே உடல்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பணியை செய்ய மறுத்தார். எனவே துருக்கியின் கான்ஸ்டான்டிநோபிளுக்கு தூக்கியடிக்கப்பட்டார். அங்கு சுல்தானின் படையில் பணியாற்ற அனுப்பப்பட்டார். அவரும் அந்தக் கால கட்டத்தில் துருக்கிக்குப் போய், ஒரு சூப்பர் ரொமான்டிக் நாவலை எழுதி முடித்துள்ளார்! ஒரு போர்வீரனுக்கும் அவனது காதலிக்குமான உறவைச் சொல்லும் கதை அது. அதில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் நெப்போலியனுக்கு அவரது காதலிக்குமிடையே நடந்தவற்றின் தொகுப்பாகவே இருந்ததாம்.
ஆனால் இந்தப் பணி முடிந்து பாரிஸ் திரும்பிய நெப்போலியனை, முன்பு வென்டீ பணி மறுத்த காரணத்தால் பதவி நீக்கம் செய்தது அரசு. நெருக்கடிக்குள்ளானார் நெப்போலியன்.
ஆனால் அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நெப்போலியனின் தயவை நாடியது புரட்சி நிர்வாகம் (டைரக்டர்ஸ் குழு), பால் பேரஸ் என்பவர் மூலம். இந்த முறை பாரிஸ் தெருக்களில் புரட்சிப் படைகளுக்கும் அரசப் படைகளுக்குமான உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பெரும் பொறுப்பு நெப்போலியனுக்கு தரப்பட்டது. அவரும் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி அக்டோபர் 5-ம் தேதி, பாரிஸ் தெருக்களில் ரத்த ஆறு ஓட, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1400 அரச படையினர் கொல்லப்பட, எஞ்சியோர் ஓடிவிட்டனர்.
சாதாரண போர் வீரராக இருந்த நெப்போலியன் படிப்படியாக பிரஞ்சு நிர்வாகத்தின் கவனத்துக்குரியவராக மாறினார். பிரஞ்சுப் படைகளின் தளபதியானார்.
செல்வம் குவிந்தது. இந்தப் பொறுப்பை தனக்கு வாங்கிக் கொடுத்த பால் பேரஸ் மனைவி ஜோஸப்பினையே பின்னர் திருமணம் செய்து கொண்டார் நெப்போலியன் (ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் நெப்போலியனுக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. ஜோஸப்பினைப் பார்த்ததும் அந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டார் மனிதர். அந்த நேரம் பார்த்து ஜோஸப்பின் கணவரும் போரில் கொல்லப்பட்டுவிட, திருமணத்துக்கு எந்தத் தடையுமில்லாமல் போனது!)
1796-ம் ஆண்டு கல்யாணமான இரண்டாம் நாள், இத்தாலியப் படையெடுப்புக்கு தலைமை தாங்கிச் சென்றார் நெப்போலியன்.
லோடி எனும் இடத்தில் நடந்த போரில் ஆஸ்திரியப் படைகளை லம்பார்டி பகுதிக்கு அப்பால் விரட்டியடித்தார். பின்னர் ரோம் வரை முன்னேறி போப்பின் அதிகாரத்தையும் ஆட்டம் காண வைத்தார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இத்தாலியையும் பிரான்ஸின் மேலாதிக்கத்தை ஏற்க வைத்தார் நெப்போலியன். அதுமட்டுமல்ல… 1100 ஆண்டுகள் சுதந்திர நாடாகத் திகழ்ந்த ஆஸ்திரியாவின் மீது படையெடுத்து அதன் தலைநகர் வியன்னாவை 1797-ல் வீழ்த்தி, பிரான்சின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தார். பிரான்சின் சார்பாக போர் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவர் கைக்கு வந்தது… அது மட்டுமா.. வென்ற நாடுகளின் செல்வங்களை அடியோடு எடுத்துக் கொள்ளும் (கொள்ளையிடும்?) அதிகாரமும் நெப்போலியன் வசம்.
நெப்போலியன் போரிடும் ஸ்டைலே அலாதியானது. அவர் பழமையான போர் முறைகளை அடியோடு உடைத்தார். போரில் பெரும்பாலும் நெப்போலியன் நடுவில் நின்று தாக்க, அவருக்கு துணையாக இரு புறத்திலும் படைகள் திரண்டு வந்து தாக்கும்… எதிரிப் படை நிலைகுலைந்து போகும். இந்த டெக்னிக்கை, எதிரணியின் போக்குக்கேற்ப திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளவும் செய்தார் நெப்போலியன். இன்னொன்றகு, எதிரி எந்தப் பகுதியில் வீக்காக இருக்கிறானோ அந்த இடத்துக்கு சடாலென போய் தாக்குவது இவரது பாணி. எப்படி போய் தாக்கவேண்டும், எந்த நேரம் என்றெல்லாம் பார்க்கக் கூடாது… நினைத்த மாத்திரத்தில் வேகமாகப் பாய்ந்து சென்று எதிரியை நிலைகுலைய வைத்தாலே போதும்… மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். இந்த டெக்னிக் கடைசி வரை அவருக்குக் கைக் கொடுத்தது.
இத்தாலிப் போரில் 150000 வீரர்களைச் சிறப்பிடித்த நெப்போலியன், ஏராளமான பீரங்கிகள் மற்றும் படையணிகளை கட்டி இழுத்து வந்தார்.
நெப்போலியன் செல்வாக்கு ஓஹோவென்று உயர்ந்தது. சொந்தமாக மூன்று செய்தித்தாள்களை நடத்தினார் அவர். இன்னொரு பக்கம் பிரான்ஸ் தேர்தல்களில் அரச விசுவாசிகளின் கை ஓங்கியது. இத்தாலியையும் ஆஸ்திரியாவையும் நெப்போலியன் கொள்ளையடித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்ட, நெப்போலியன் பாரிஸுக்குப் போகாமலேயே, தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு புரட்சியை அரங்கேற்றி அரச விசுவாசிகளை தூக்கினார். மீண்டும் அதிகாரம் நெப்போலியனுக்கு வேண்டப்பட்ட இயக்குநர்கள் கைகளுக்கு வந்தது.
இப்போது முன்னிலும் பல மடங்கு பாப்புலர் ஹீரோவாக பாரிசுக்குத் திரும்பினார் நெப்போலியன்.
அரசு நிர்வாகத்தை ஆளும் இயக்குநர்களை விட நெப்போலியனுக்கு கூடுதல் மரியாதை.. செல்வாக்கு!
இதை பிரான்ஸின் ஆட்சியாளர்களான இயக்குநர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நேரம் பார்த்து எகிப்துக்குப் படையெடுத்துச் செல்ல நெப்போலியன் விருப்பம் தெரிவித்தார். அப்படியே, சூயஸ் கால்வாய் வழியாக ஒரு 15000 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி, திப்பு சுல்தான் உதவியோடு பிரிட்டிஷ்காரர்களை விரட்டிவிட்டு, இந்தியாவில் பிரான்ஸின் வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்றும் விரும்பினார்.
ஆனால் அவ்வளவு பெரிய படையை இந்தியாவுக்கு ஆகும் செலவு கட்டுப்படியாகுமா என ஆலோசகர்கள் யோசிக்க, ‘அட முதலில் அந்தாளை பாரிசிலிருந்து பக்குவமாக அனுப்பி வெச்சுடுங்க… போய் மெல்ல வரட்டும்’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டனராம் ஆட்சியிலிருந்த இயக்குநர்கள்.
நெப்போலியனின் எகிப்து பயணம் துவங்கியது.

எகிப்தில் நெப்போலியன்...
ரண்டுமாதங்கள் பக்காவாக திட்டமிடப்பட்ட போர் அது. எகிப்து – சூயஸ் கால்வாய் பகுதிதான் மத்திய கிழக்கு நாடுகளின் நுழைவாயிலாகத் திகழ்ந்தது அன்றைக்கு. குறிப்பாக பிரிட்டிஷ்காரர்களுக்கு. அந்த வழியை அடைத்துவிட்டால்… அல்லது கையகப்படுத்திவிட்டால், பிரிட்டனின் வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு ஒரு செக் வைத்த மாதிரியும் இருக்கும், இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்பது நெப்போலியன் திட்டம்.
1798-ல் மால்டாவை அடைந்த நெப்போலியன், ஜஸ்ட் மூன்றே வீரர்களை இழந்து எகிப்தின் முக்கியத் துறைமுகத்தைப் பிடித்தார் நெப்போலியன். அடுத்த வாரத்தில் அலெக்ஸாண்ட்ரியாவை வீழ்த்தினார். அடுத்து ஒரு வாரம் நடந்த ‘பிரமிடு போரில்’ 300 பிரெஞ்சு வீரர்களை இழந்த நெப்போலியன், 6000 மாம்லுக் வீரர்களை வீழ்த்திவிட்டார்.
இருந்தாலும் இதை பெரிய வெற்றியாகக் கொண்டாட முடியவில்லை அவரால். காரணம் பிரிட்டிஷ் கப்பல் படை தளபதி நெல்சன். நெப்போலியனின் கப்பல் படையையே பெருமளவு நாசம் செய்துவிட்டார் அவர். மத்தியதரைக் கடலில் பிரான்ஸின் கடல் ஆதிக்கத்தை நிலை நாட்டும் நெப்போலியன் முயற்சி தோற்றுப் போனது என்றே வரலாறு பதிவு செய்துள்ளது.
இந்தத் தோல்வியிலிருந்து தப்பிக்க, ஆட்டோமான் துருக்கியர் வசமிருந்த சிரியா, கலிலே பகுதிக்கு தனது 13000 படையினருடன் சென்றார். அங்கே அரீஷ், காஸா, ஜாஃபா, ஹெய்ஃபா போன்ற கடலோர நகரங்களைக் கைப்பற்ற கடும் போரில் இறங்கினார். ஏராளமானவர்களைக் கொன்று ரத்தக் குளியல் நடத்தியது நெப்போலியன் படை. குறிப்பாக ஜாஃபாவில் நிகழ்ந்தது கொடூரத்தின் உச்சம்.

ஜாஃபாவில்...
இங்கே பிரெஞ்சுப் படையை எதிர்த்துப் போரிட்டவர்கள் கைதிகளாக இருந்து படையில் சேர்க்கப்பட்டவர்கள். மொத்தம் 1400 பேர். இவர்களை துப்பாக்கியின் முனையில் இருந்த கத்தியால் குத்தியே கொன்றுவிட்டதாம் நெப்போலியன் படை. சுட்டால் குண்டு வீணாகிவிடுமே என்பதால் இந்த குரூரமாம். இவர்களைத் தவிர இந்தப் பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களையும் விட்டு வைக்காமல் மூன்று நாட்கள் தொடர்ந்து கொன்றழித்தார்களாம் பிரெஞ்சுப் படையினர்.
இந்த கொடூரக் கொலையே பின்னர் பிளேக் நோய் பரவ காரணமாக, அது எங்கே தம் படையைத் தொற்றிக் கொள்ளுமோ என்று பின்வாங்கி மீண்டும் எகிப்துக்கு வந்துவிட்டார் நெப்போலியன்.
அதேநேரம் பிரான்ஸில் அவரது செய்தித் தாள்களும் உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படாமல், பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
பிரான்ஸுக்கு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் நெப்போலியன். அங்கே பிரான்ஸ் படைகள் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தன.
தனக்கு பதில் கெப்ளர் என்பவரை பிரெஞ்சுப் படைகளுக்குப் பொறுப்பாக நியமித்துவிட்டு பிரான்ஸ் திரும்பினார் நெப்போலியன், 1799, அக்டோபர் மாதம். அப்போது கிட்டத்தட்ட நாடு திவாலாகியிருந்தது. அரசின் இயக்குநர்கள் செல்லாக் காசுகளாக பார்க்கப்பட்டனர். மக்களிடம் அவர்களுக்கு இம்மியளவு கூட மதிப்பில்லை.
இந்த சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார் நெப்போலியன். அதே நேரம் இயக்குநர்களோ தங்களுக்கு பெரும் சவாலாகத் திகழும் நெப்போலியனை எப்படி தூக்கியெறிவது என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இயக்குநர் குழுவில் இருந்த தனக்கு வேண்டப்பட்டவர் மூலம் இன்னொரு புரட்சியை அரங்கேற்றினார் நெப்போலியன்.
9 நவம்பர் 1799-ல் இயக்குநர் குழுவைக் கலைத்துவிட்டு புதிய கான்சல் அமைப்பைத் தோற்றுவித்த நெப்போலியன், தன்னை முதன்மை கான்சலாக அறிவித்தார். அதற்கேற்ப புதிய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றையும் தோற்றுவித்தார்.
பிரான்ஸின் ஆட்சியாளராக நெப்போலியன் பதவியேற்ற நேரம், மீண்டும் படு வீக்காக இருந்தது பிரான்ஸ் நாடு. இத்தாலி அதன் கட்டுப்பாட்டிலிருந்து விலகி மீண்டும் வாலாட்ட, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திலிருந்து நெப்போலியன் தனது பெரும்படையுடன் ஆல்ப்ஸைக் கடந்து இத்தாலிக்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், 1801-ம் ஆண்டு லுனவில்லே உடன்பாடு மூலம் வெற்றிகரமாக இத்தாலியை தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

இத்தாலியப் போருக்காக ஆல்ப்ஸ் மலையைக் கடக்கும் நெப்போலியன்
அடுத்த நான்கு ஆண்டுகளில் பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்டார் நெப்போலியன். மன்னராட்சிக்கு எதிராக பெரும் புரட்சி செய்து, குடியரசாட்சியை கொண்டு வந்த அதே நெப்போலியன் போனபார்ட், மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்தினார் பிரான்ஸில்!
தொடர்ந்து பல போர்களில் வென்ற நெப்போலியன், ஒரு கட்டத்தில் போர்ச்சுகல், பிரிட்டன், ஸ்கான்டிநேவியா நீங்கலாக மொத்த ஐரோப்பாவையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்தார். ரஷ்ய மன்னர் ஜார் அலெக்சாண்டருடன் டில்ஸிட் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஐரோப்பாவை இரு பகுதியாகப் பிரித்தார். தான் வென்ற நாடுகள் முழுவதிலும் தனது அண்ணன், தம்பிகள், நண்பர்களை ஆட்சியாளர்களாக நியமித்துக் கொண்டார்.
மொத்த ஐரோப்பாவும் தன் கைவசம் வந்ததால், பிரிட்டனுக்கு எதிராக பொருளாதாரத் தடையையும் கொண்டு வந்தார்… ஆனால் அது சரியான பலனைத் தரவில்லை.

கொலம்பஸ் - ஒரு பார்வை



கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஐரோப்பாவிலிருந்து கீழ்த்திசை நாடுகளுக்கு மேற்கு நோக்கி ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்று தற்செயலாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அதன் மூலம், தாம் எதிர்பாராத பெரும் செல்வாக்கினை உலக வரலாற்றில் பெற்றார். இவரது கண்டுபிடிப்பு, புதிய உலகில் தொடர்ந்து நாடாய்வுக்கும், குடியேற்ற ஆதிக்கத்திற்கும் வழி வகுத்தது. இந்தக் கண்டுபிடிப்பு, உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் விளங்கியது. அது மக்கள் தொகை பெருகி வந்த ஐரோப்பாவின் மக்கள் குடியேறுவதற்கு இரு புதிய கண்டங்களுக்கு வழி திறந்து விட்டது. ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுத்திய கனிமச் செல்வத்திற்கும், மூலப் பொருள்களுக்கும் ஆதாரங்களை அளித்தது. அவருடைய கண்டுபிடிப்பினால், அமெரிக்கச் சிவப்பிந்தியர்களின் நாகரிகங்கள் அழிந்து போயின. நாளடைவில், மேற்கு கோளார்த்தத்தில் ஒரு காலத்தில் குடியிருந்த சிவப்பிந்தியரின் நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய நாடுகள் அங்கு தோன்றுவதற்கு இக்கண்டுபிடிப்பு வழி வகுத்தது.
இந்தப் புதிய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் பெரும் நிலைமாற்றத்தை ஏற்படுத்தின. உலகில் இத்துணை பெரும் மாறுதல்களுக்கு வழி வகுத்த இந்த முக்கியக் கண்டுபிடிப்பைச் செய்த கொலம்பஸ், இத்தாலியிலுள்ள ஜெனோவாவில் 1451 இல் பிறந்தார். அவர் தேர்ந்த கடல்வழி வல்லுநராகி ஒரு கப்பலின் தலைவரானார். அட்லாண்டிக் மாகடல் வழியாக நேர் மேற்காகச் சென்று, கிழக்கு ஆசியாவுக்கு நடைமுறை மார்க்கம் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம் என அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையைச் செயற்படுத்துவதற்கு அவர் விடாமுயற்சியுடன் பாடுபட்டார். இறுதியாக, அந்தக் கடல் வழியைக் கண்டுபிடிக்க தாம் மேற்கொள்ளவிருந்த பெரும் பயணத்திற்கு காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லாவின் நிதியுதவியைப் பெறுவதில் வெற்றி கண்டார். இவருடைய கப்பல் அணி, 1492 ஆகஸ்ட் 3 அன்று ஸ்பெயினிலிருந்த பயணத்தைத் தொடங்கியது.

அவர்கள், முதலில் ஆஃப்ரிக்ககக் கடலோரமிருந்த கானரித் தீவுகளில் இறங்கினார்கள். கானரித் தீவுகளிலிருந்து செப்டம்பர் 6 அன்று புறப்பட்டு, நேர் மேற்காகக் கப்பல்களைச் செலுத்தினார்கள். அது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. அவரது மாலுமிகள் அச்சம் கொண்டார்கள். தாயகம் திரும்பிவிட விரும்பினார்கள். ஆனால், கொலம்பஸ் பயணத்தைத் தொடரும்படி வலியுறுத்தினார். 1492 அக்டோபர் 12 அன்று அவர்களுக்குத் தரை தென்பட்டது. அங்கே தரையிறங்கினார்கள். அடுத்து வந்த மார்ச் மாதத்தில் கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பினார். பெருஞ்சாதனை புரிந்த கொலம்பஸ் வெற்றி வீரருக்குரிய மிக உயர்ந்த மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார். அதன் பின்பு, சீனாவுடன் அல்லது ஜப்பானுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நம்பிக்கையில் அவர் மூன்று முறை அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
எனினும், கிழக்கு ஆசியாவுக்கு ஒரு கடல் வழியைத் தாம் கண்டுபிடித்து விட்டதாகவே அவர் உறுதியாக நம்பினார். அவர் கண்டுபிடித்தது கிழக்கு ஆசியாவுக்குரிய கடல் வழி அன்று என்பதைப் பெரும் பாலான மக்கள் நெடுங்காலத்திற்கு பின்னரே உணர்ந்தனர். கொலம்பஸ் கண்டுபிடிக்கும் ஏதேனுமொரு நிலப்பகுதிக்கு அவரை ஆளுநராக நியமிப்பதாக அவருக்கு இசபெல்லா அரசி வாக்குறுதியளித்திருந்தார். அதன்படி கொலம்பஸ் கண்டுபிடித்த நிலப்பகுதிக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், நிருவாகி என்ற முறையில் அவர் திறமையற்றவராக இருந்தார். எனவே, அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கை விலங்குடன் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டார். ஸ்பெயினில் அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதன் பின்னர் அவருக்கு நிருவாகப் பதவி எதுவும் அளிக்கப்படவில்லை.
அவர் இறுதி நாட்களில் வறுமையில் வாடி மாண்டதாகச் சிலர் கூறுவர். ஆனால் அது உண்மையன்று அவர் 1506 இல் காலமான போது ஓரளவுக்குச் செல்வச் செழிப்புடனேயே இருந்தார். கொலம்பசின் முதற்பயணம் ஐரோப்பாவின் வரலாற்றில் புரட்சிகரமான தாக்குறவை ஏற்படுத்தியது. அதைவிட பெரும் விளைவுகள் அமெரிக்காவில் ஏற்பட்டன. இன்றைய உலகில் ஒவ்வொரு பள்ளி மாணவரும் 1492 ஆம் ஆண்டை அறிவர். ஆயினும், உலகப் பெரியோர்களின் வரிசையில் கொலம்பசைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஒரு காரணம். புதிய உலகைக் கண்டு பிடிக்கும் முதல் ஐரோப்பியர் கொலம்பஸ் இல்லை, என்பதாகும்.
கொலம்பசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே லெஃய்ப் எரிக்சன் என்ற ஸ்காண்டிநேவிய (வைக்கிங்) மாலுமி அமெரிக்கா சென்றடைந்ததாகவும், அவரைப் பின்பற்றிக் கொலம்பசுக்கு முன்னதாக பல ஐரோப்பியர்கள் அட்லாண்டிக்கைத் தாண்டி அமெரிக்கா சென்று வந்திருக்கலாம் என்பதும் இவர்களுடைய வாதம். ஆனால், வரலாற்றை நோக்கிப் பார்த்தால் லெஃய்ப் எரிக்சன் முக்கியமானவர் அன்று. அவருடைய கண்டு பிடிப்புகள் யாருக்கும் தெரியவரவில்லை. மேலும், அவருடைய கண்டுபிடிப்புகளினால், ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ பெரும் மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. இதற்கு மாறாக, கொலம்பசின் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் ஐரோப்பா முழுவதும் மிக விரைவாகப் பரவின. அவர் ஐரோப்பா திரும்பிய சில ஆண்டுகளிலேயே, அவருடைய கண்டுபிடிப்புகள் நேரடி விளைவுகளாக, புதிய உலகுக்குப் பல புதிய கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிலப்பரப்புகளை வெற்றி கொண்டு, குடியேற்றங்களை அமைக்கும் பணி தொடங்கியது.

கொலம்பஸ் தோன்றாமல் இருந்திருந்தாலும், அவர் சாதித்ததை யாராவது சாதித்திருப்பார்கள் என்று சிலர் வாதிடுவர். இந்நூலில் இடம்பெற்ற மற்ற பெரியார்களைப் பற்றிக்கூட இத்தகைய வாதம் எழுந்ததுண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பா ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்தது. அங்கு வாணிகம் பெருகி வந்தது.  வாணிகப் பெருக்கத்திற்குப் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பது இன்றியமையாததாக இருந்தது. போர்ச்சுகீசியர்கள், கொலம்பசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே கிழக்கிந்திய தீவுகளுக்குப் புதிய வழியைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அமெரிக்கா விரைவிலேயே ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கக்கூடும். அமெரிக்கக் கண்டத்தை கண்டு பிடிப்பதில் அதிகக் காலத் தாழ்வும் ஏற்பட்டிருக்காது.
ஆனால், அமெரிக்காவை 1492 இல் கொலம்பஸ் கண்டுபிடிக்காமல் 1510 இல் ஒரு ஃபிரெஞ்சு அல்லது ஆங்கிலேய நாடாய்வுக் குழு கண்டுபிடித்திருக்குமானால், அதன் பின் விளைவுகள் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். எது எவ்வாறயினும், அமெரிக்காவை உள்ளபடியே கண்டுபிடித்த மனிதர் கொலம்பஸே ஆவார். முதலாவது காரணம் கொலம்பசின் பயணங்களுக்கு முன்னரே. 15 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் பலர் உலகம் உருண்டையானது என்பதை அறிந்திருந்தனர். உலகம் உருண்டை என்ற கொள்கையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கத் தத்துவஞானிகள் எடுத்துக் கூறியுள்ளனர். இது பற்றிய அரிஸ்டாட்டிலின் முற்கோளை 1400 களில் படித்த ஐரோப்பியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதை மெய்பித்துகூ காட்டியதற்காகக் கொலம்பஸ் புகழ் பெறவில்லை. உண்மையைக் கூறின், உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிப்பதில் அவர் வெற்றி பெறவில்லை. புதிய உலகைக் கண்டுபிடித்தற்காகவே அவர் புகழ் பெற்றார்.
 பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்யிர்களே, அரிஸ்டாட்டிலோ அமெரிக்கக் கண்டங்கள் இருப்பதை அறிந்திருக்கவே இல்லை. கொலம்பசின் பண்புகள் முற்றிலும் போற்றுவதற்குரியனவாக இருக்கவில்லை. அவர் மிகவும் பேராசை கொண்டவராக இருந்தார். தமது பயணத்திற்கு நிதியுதவியளிக்க இசபெல்லா அரசியை இணங்க வைக்க அவர் அரும்பாடுபட வேண்டியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் அவர் மிகுந்த பேராசையுடன் பேரம் பேசியதேயாகும். மேலும், இன்றைய அறவியல் தராதரங்களின் அடிப்படையில் அவருடைய நடத்தையைக் கணிப்பது நியாயமில்லையென்றாலும், அவர் சிவப்பிந்தியர்களை மிகவும் கொடூரமாக நடத்தனார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், இது வரலாற்றில் உன்னதப் பண்பியல்புகளைக் கொண்டிருந்தவர்களின் பட்டியல் அன்று; மாறாக, மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களின் பட்டியலே இது. அந்த வகையில் பார்த்தால், இந்தப் பட்டியலில் முன்னணியிடத்தைப் பெறுவதற்கு கொலம்பஸ் முற்றிலும் தகுதியுடையவரே யாவார். 

நேதாஜி என்ற உன்னத தலைவனின் வரலாறு


"இழைத்தது இகவாவைச் சாவாரை யாரோ
பிழைத்தது ஒருக்கிற் பவர்"

என்ற வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப ஒரு படையில் சேரும்போது உயிரைக் கொல்வேன் என்று சத்தியம் செய்து நாட்டைக் காக்கும் படைவீரர்களை யார்தாம் குற்றம் கூறி ஏளனம் செய்ய முடியும். அதைப் போன்று இந்திய தேசிய ராணுவப் படையை திரட்டி வீரம் செறிந்த வீரர்களை உருவாக்கிய மாவீரன் நேதாஜி இந்திய சுதந்திர வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் அழியாத இடம் பெற்றுவிட்டார்.

ஒரிசாவில் கட்டாக் நகரில் கோதானியர் என்ற ஊரில் 1897 ஜனவரி 23ஆம் நாள் நேதாஜி பிறந்தார். தந்தை பெயர் ஜானகிநாத். தாய் பிரபாவதி.இவர்களுக்கு ஒன்பதாவது குழந்தையாக நேதாஜி பிறந்தார். மொத்த குழந்தைகள் 14 பேர். ஆண்-8, பெண்-6. நேதாஜிக்கு பெற்றோர் வைத்த பெயர் சுபாஷ் சந்திரன். தந்தை வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். நேதாஜியின் 5வது வயதில் ஆங்கில மக்கள்அதிகம் படிக்கும் ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்த பள்ளியில் படித்த ஆங்கில வம்சாவளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் காட்டப்பட்டன. இந்த நிகழ்ச்சி சிறுவன் சுபாசை மிகவும் பாதித்தது. இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. 

நேதாஜியின் ஆசிரியர் பெனிமாதவதாஸ் நேதாஜிக்கு தன்மானம், நாட்டுப்பற்று கதைகளை கூறி அவரது சிந்தனையை செறிவூட்டினார். தந்தை, தாய் மூலமாக தினமும் விவேகானந்தர், பரஹம்சர் வாழ்க்கை வரலாறு அறிந்தார். அவர்களைப் பற்றிய நூல்களை ஆவலுடன் படித்தார். 1913ல் மெட்ரிக்குலேசன் தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது இடம் பெற்று பாராட்டப்பட்டார். அப்போது தன்னார்வ தொண்டராக வங்கத்தில் சிறப்பு பெற்ற அரவிந்தரைப் போல் தானும் சமூகத்தொண்டு புரிய வேண்டும் என்று உறுதி ஏற்றார். 1915ல் எம்.ஏ. படிப்பு படிப்பதற்காக கல்கத்தாவில் கால் ஊன்றினார். கல்லூரியில் வோட்டன் என்ற ஆங்கில ஆசிரியர் இந்திய மாணவர்களை தரக்குறைவாக நடத்தினார். வோட்டன் தாக்கப்பட்டார். 1919ல் ரெளலட் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. 1919 ஏப்ரல் 13ல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நின்ற மக்கள் மீது ஜாலியன் வாலாபாக்கில் குண்டுமழை பொழிந்து ஆங்கில ஏகாதிபத்தியம் அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்தது. ராவ்பகதூர், சர் பட்டங்களை தேசப்பற்றாளர்கள் தூக்கி எறிந்தனர்.

இந்நிலையில் லண்டனில் வக்கில் தொழில் படிக்க நேதாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. லண்டன் சென்று பட்டம் பெற்று 1921ல் நேதாஜி இந்தியா திரும்பினார். தன்னுடைய 24வது வயதில் மகாத்மா காந்தியை சந்தித்தார். அப்போது மகாத்மாவின் வயது 52. மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற சுதந்திரபோராட்ட வீரர் சித்தரஞ்சன்தாஸ் அவர்களை நேதாஜி தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். 1921ல் வங்கத்தில் ஒரு கல்லூரியில் தலைமை பேராசிரியராக பதவி ஏற்றார். 1921ல் வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு அளிக்க ஆங்கில அரசு பிரமாண்டமான ஏற்பாடு செய்தது. ஆனால் வேல்ஸ் இளவரசரின் வருகையை எதிர்த்து நேதாஜி தலைமையில் பங்களா பந்த் நடைபெற்றது மட்டுமில்லாமல் வேல்ஸ் இளவரசன் வருகையின்போது கறுப்புக்கொடி போராட்டத்தை நேதாஜி தலைமை ஏற்று நடத்தினார். 1922ல் சட்டமன்ற இயக்கத்தை வங்கத்தில் சிறப்பாக நடத்திக்காட்டினார். அதே ஆண்டு மாஸ்கோவில் லெனின் தலைமையில் நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்து கொள்ள 4 பேர்தேர்வு செய்யப்பட்டனர். சித்தரஞ்சன்தாஸ், நேதாஜி, எஸ்.ஏ.டாங்கே, நளினி குப்தா. ஆங்கில அரசால் நேதாஜி மட்டும் அனுமதிக்கப்படவில்லை.

1924ல் கல்கத்தா கார்ப்பரேஷ¬ன் தேர்தலில் வெற்றி பெற்று அதன் மேயரானார். 27 வயதில் இந்த பதவியை அடைந்தார். என்ன ஆச்சர்யம்!. பதவி ஏற்ற மறுநாளே தன்னுடைய மாத சம்பளம் ரூ.3000 என்று இருந்ததை ரூ.1500 என்று பாதியாக குறைத்துக்கொண்டார். மிகக் குறைந்த ஊதியத்தில் கல்கத்தா மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களைப் பார்த்து இரக்கப்பட்டு தான் மட்டும் அதிக ஊதியம் பெற விரும்பாத மகத்தான மனிதநேயனாக நேதாஜி வாழ்ந்தார்.

1922ல் கயா காங்கிரஸ், 1923ல் அலகாபாத் காங்கிரஸ், 1925ல் நேதாஜி காரணம் இன்றி கைது செய்யப்பட்டார். கல்கத்தாவில் நேதாஜியின் கைதை கண்டித்து மாபெரும் கண்டனக்கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. சித்தரஞ்சன்தாஸ், நேதாஜி இருவரும் வங்கத்தில் சுயராஜ்ஜிய கட்சியைத் தொடங்கி அது வேகமாக வளர்ந்து வந்ததை ஆங்கில ஆட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேதாஜி அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பர்மாவில் உள்ள மாண்டேலா சிறையில் லாலா லஜபதிராஜ், திலகர் ஆகியோருடன் சேர்த்து அடைக்கப்பட்டார். 

1925ல் சித்தரஞ்சன்தாஸ் மறைந்தார். 1928ல் சைமன்குழு இந்தியா வந்தபோது அதில் ஒருவர் கூட இந்தியர் இல்லாததை கண்டித்து காங்கிரஸ் அதை பகிஷ்கரித்தது. அதை எதிர்த்த லாலாலஜபதிராஜ் பஞ்சாப்பில் குதிரைப்படையால் தாக்கப்பட்டு சில நாட்களில் இறந்து போனார். 1928ல் நேதாஜி பரிபூர்ண சுதந்திரம் என்ற முழக்கத்தை காங்கிரஸ் மாநாட்டில் முன்வைத்தார். நேரு வழிமொழிந்தும் காந்தி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. 1930 ஜனவரி 26ஆம் தேதி நேதாஜி விடுதலை நாளாக கொண்டாடினார். 1930ல் காந்தி உப்புவரியை எதிர்த்து தண்டி யாத்திரை நடத்தினார். 1931ல் கராச்சியில் காங்கிரஸ் மார்ச் 29ஆம்தேதி கூடியது. 1931 மார்ச் 23ல் தூக்கிலிடப்பட்ட மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் அஞ்சலி தீர்மானத்தை நேதாஜி கொண்டுவந்தார். நேரு துக்க அறிக்கையை சமர்ப்பித்தார். வெறும் வருத்தம் தெரிவித்தால் போதும் என்று காந்தி சொன்னதும் நேதாஜி மாநாட்டை விட்டு வெளிநடப்பு செய்தார். 1932ல் ஜனவரியில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு மத்தியப்பிரதேசம் சியோனி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிகிச்சைக்காக 13.2.1933ல் ஐரோப்பா பயணமானார். ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவில் மருத்துவ சிகிச்சை பெற்றார். வியன்னாவில் வல்லபாய் பட்டேலின் தம்பி பி.ஜே.படேல் அவருக்கு மருத்துவமனையில் அனைத்து உதவிகளும் செய்தார்.

வியன்னாவில் சிகிச்சை பெறும்போது தன்னை கவனித்துக்கொண்ட பெண் எமிலியை தனது 37வது வயதில் திருமணம் செய்து கொண்டார். 1938ல் இந்தியா திரும்பி காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு காந்தியின் சார்பாக நிறுத்தப்பட்டு இருந்த பட்டாபி சீதாராமய்யரை எதிர்த்து போட்டியிட்டு 250 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார். ஆனால் காங்கிரஸ் காந்தியின் செல்வாக்குக்கு மாறாக எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து காங்கிரசிலிருந்து வெளியேறி 1938ல் பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை தொடங்கினார். 1939ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானது.

17.4.1941ல் இந்தியாவில் இருந்து கிளம்பி மாறுவேடம் போட்டு ஆப்கானிஸ்தான், ரஷ்யா தாண்டி மார்ச் 17,1941ல் ஜெர்மனி வந்து ஹிட்லரை சந்தித்தார். அங்கே ஆசாத்ஹிந்த் என்ற வானொலி ஒலிபரப்பை தொடங்கினார். மூவர்ண கொடியை ஏற்படுத்தி நடுவில் புலிச்சின்னம் வைத்தார். தாகூரின் ஜனகனமண தேசியகீதமாக அறிவிப்பு செய்தார். ஜெய்ஹிந்த் வீர முழக்கமாக எழுப்பப்பட்டது. 1943 பிப்ரவரி 9 ஜெர்மனியில் இருந்து 4 மாதகாலம் நீர்மூழ்கி கப்பலில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்து ஜப்பான் சென்றடைந்தார். 2.7.1943ல் சிங்கப்பூர் சென்று இந்திய தேசிய ராணுவத்தில் சேர மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். 29.12.1943ல் சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்து அதன் தலைவரானார். இராணுவத்தில் வீரம் செறிந்த பெண்களுக்கு கேப்டன் லெட்சுமி சாகல் தலைமையேற்றார்.

நேதாஜி அரசில் கல்வித்துறை, விளம்பரத்துறை, மருத்துவத்துறை, உளவுத்துறை என்ற இலாக்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து அந்தமான் வந்தடைந்து பங்களாதேசின் சிட்டகாங் பகுதியில் முதல் தாக்குதலை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மீது தொடுத்தார். சலோ டெல்லி பிரசித்தி பெற்ற கோஷமானது. முதல் தாக்குதலில் மாபெரும் வெற்றியைப்பெற்றார். பிரிட்டிஷ் ராணுவம் பின் வாங்கியது. இந்திய தேசிய ராணுவத்தின் அடுத்த குறி இம்பால். 22.4.1944 ல் இரண்டாவது தாக்குதல் யுத்தம் தொடர, வெற்றி பெற நேதாஜி காந்தியிடம் ஆசீர்வாதம் வாங்கினார். ஆனால் 1945 ஆகஸ்ட் 6ல் ஜப்பான் மீது (ஹிரோசிமா) அணுகுண்டை அமெரிக்கா வீசியது. ஆகஸ்ட் 9ல் நாகசாகியில் அடுத்த அணுகுண்டை போட்டது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சாம்பலானார்கள். ஜப்பான் சரணாகதி ஆனது. இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ்படையால் முறியடிக்கப்பட்டது. 

17.8.1945ல் கடைசியாக ஜப்பானுக்கு சாப்கோனில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். விமானம் விபத்துக்கு உள்ளாகி நேதாஜி உயிர் இழந்ததாக ஜப்பான் வானொலி அறிவித்தது. அவர் இறந்து விட்டாரா? இல்லையா என்ற சர்ச்சை தொடர்ந்தது. வாசகர்களுக்கும் இந்திய இளைஞர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு காவியத்தை படிப்பது போல பலமுறை படித்துள்ளேன். என் மனதில் பட்டது நேதாஜி உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவை பார்க்காமல் மட்டும் அவரால் இருக்கவே முடியாது. பாரதத்தை உயிரை விட மேலாக நேசித்த உத்தமன் நேதாஜி அவரது புகழ் வாழ்க.

0/Post a Comment/Comments

Previous News Next News
New Vision
New Vision