இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள பிஞ்சாய் நகரில் தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம் போல் தீப்பெட்டி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஏராளமான தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக தொழிற் சாலைக்குள் தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறி அடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியே ஓட தொடங்கினர்.
ஆனால் அதற்குள் தீ நாலாபுறமும் சூழ்ந்துகொண்டதால், பலர் தொழிற்சாலைக்குள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் ஏராளமான வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைத்து தொழிற் சாலைக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
எனினும் 30 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாதபடி தீயில் கருகி கரிக்கட்டையாகி விட்டன. உயிர் இழந்த 30 பேரில் சிறுவர்கள் சிலரும் அடங்குவர். இதற்கிடையில் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து, மாகாண பேரிடர் மீட்பு முகமையின் தலைவர் ரயாதில் லூபிஸ் கூறுகையில் “தொழிற்சாலையில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டது. இந்த விபத்தில் 3 சிறுவர்களும் உயிர் இழந்து இருக்கிறார்கள்” என கூறினார்.
Post a Comment