விஸ்வரூபம் : திரைவிமர்சனம்
இனிமேல் ஆஸ்கர் விருதே கிடைத்தால் கூட அதை காயலாங் கடைக்குள் இலவசமாக வீசியெறிந்துவிட்டு உலகின் 'மத சார்புள்ள' நாடுகளில் ஏதாவதொன்றுக்கு விசிட் அடித்து அங்குள்ள பிரச்சனைகளுக்காகவும் படம் எடுக்கலாம் கமல்.
ஒரு 'விஸ்வரூபம்' எடுத்து, அதை உருப்படியாக தியேட்டர்களுக்கு கொண்டு வருவதற்குள், முறைத்துக் கொண்டே கழுத்தறுக்கும் மத வாதிகளையும், சிரித்துக் கொண்டே சிரம் அறுக்கும் மித வாதிகளையும் பார்த்துவிட்டார் கமல். 'போதும்டா பொழப்பு' என்று நினைப்பாரென்றால், 'விஸ்வரூபம் பார்ட் 2 வரப்போவுது பாருங்க. அதுவும் இந்தியாவுலேயே கதை நடக்கும்' என்று ட்விஸ்ட் வைத்து படத்தை முடிக்கிறார். இனிமேல் அடுத்த பஞ்சாயத்துக்கு ஆலமரத்தை புக் பண்ண ஆலாய் பறப்பார்கள் இங்கே!
கதக் கலைஞராக நடன மாணவிகளுக்கு வகுப்பெடுக்கும் கமலுக்கு பூஜா குமார்தான் மனைவி. ஊருக்கும் பேருக்கும்தான் இது. நிஜத்தில் இவர் தன் ஆபிஸ் முதலாளியோடு செட்டில் ஆகிவிட நினைக்கும் ஆதர்ஷம் கெட்ட மனைவி. கமலை சந்தேகப்பட்டு அவரை பின்தொடர ஆளனுப்புகிறார். அந்த துப்பறியும் புலியோ நுழைய கூடாத இடத்தில் நுழைந்து இரண்டு பேருக்கும் வினை வைத்துவிட்டு செத்துப்போகிறது.
தம்பதிகளை கடத்திச் செல்லும் தீவிரவாதிகளின் தளபதி, யாருடைய உத்தரவுக்காகவோ காத்திருக்க, கமலின் போட்டோவை பார்க்கிற அந்த ஆப்கன் தீவிரவாத தலைவன் உமர், அதிர்ச்சியாகிறார். அதுவரை நாம் பார்த்த நளினமான நாட்டிய கலைஞன் கமல், ஒரு காலத்தில் இந்திய உளவு பரிவின் தலைவர். கம்பீரமான அதிகாரி.
கமலுக்கு அம்பத்தெட்டு வயசு என்றால் நம்பவா முடிகிறது? அதுவும் கதக் கலைஞராக அவர் காட்டும் முக பாவனைகள், நேற்று அறிமுகமான இளம் ஹீரோவை போல இருக்கிறது. பெண்மை பெரும்பகுதி, ஆண்மை அதில் சிறிது என்றிருக்கும் ஒருவன்(ள்) எப்படி நடப்பானோ, அப்படி நடக்கிறார். அதுவும் அமெரிக்காவின் வீதிகளில் தன்னை துரத்தும் ஒருவனை கண்டு பதுங்கும் அவரது நளினம், அப்படியே கண்ணுக்குள் நின்று மனசுக்குள் பதிகிறது.
தலிபான்களின் பூமி எப்படி ரத்த களறியாகிக் கிடக்கிறது? அங்குள்ள சிறுவர்களின் விளையாட்டு கூட துப்பாக்கியும், சுடுதலுமாகவே இருப்பது ஏன்? குழந்தை தொழிலாளிகள் போல, குழந்தை தீவிரவாதிகளும் இருக்கிறார்களே என்றெல்லாம் கவலை பட்டிருக்கிறார் கமல். அதையெல்லாம் உருப்படியாக வெளியே கொண்டு வர அதிக சிரமமும் பட்டிருக்கிறார்.
வசனமும் கமல்தான்! தனது சொந்த வீட்டில் எப்படி வேண்டுமானாலும் துப்பிக் கொள்கிற சுதந்திரம் அவருக்கு இருப்பதாலோ என்னவோ, ஐயராத்து மாமிகளை அநியாயத்துக்கு தீண்டி பார்க்கிறது அவரது கிண்டல்கள். அதே நேரத்தில், கடவுள் மறுப்பு விஷயங்களை மிக இயல்பாக து£விவிட்டு போகிறது கமலின் குரல். சில இடங்களில் மிக மெல்லிய நகைச்சுவை வெடிகுண்டும் வீசப்படுகிறது.
தமிழ்சினிமா ஒவ்வொரு முறையும் டெக்னாலஜி விஷயத்தில் சிகரம் தொடுவது கமலால் மட்டுமே! அதற்கப்புறம்தான் ஷங்கரெல்லாம். இந்த படத்தில் சிகரத்தையும் ஸ்டூலாக்கிக் கொண்டு அதையும் தாண்டி கால் வைக்கிறார் கமல். ஒவ்வொரு காட்சியும் மிரட்டல், மிரட்டல்! இதற்காக போஸ்டர் ஒட்டிய பையனில் துவங்கி கமலின் டீமில் வேலை பார்த்த உச்சபட்ச தொழில்நுட்ப வல்லுனர் வரைக்கும் பாராட்டி விடலாம்.
ஆக்ஸ்போர்டு வாத்தியார் அஞ்சாம் கிளாஸ் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்ததை போல ஆங்காங்கே நம்மை தடுமாற வைக்கிற கமலாஸ்திரங்களும் படம் நெடுக இருக்கிறது. இதையெல்லாம் சமாளிக்கதான நாங்க ஏ சென்ட்டர், பி சென்ட்டர் பாடமெல்லாம் கற்று வச்சுருக்கோமே!
பார்ட் 2 படத்தை விட, அதற்கு முன் நடக்கவிருக்கும் அமளிகளை பார்க்க ஆசையா இருக்கோம். சீக்கிரம் வாங்க உலக நாயகரே!
நன்றி அபிஷேக்
Post a Comment